சசிகலா ஜெயிலுக்குப் போன வருத்தம் இல்லாமல் ஜாலியாக பதவியேற்ற முதல்வர், அமைச்சர்கள்

2014ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி, ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேருக்கும் சொத்துக்குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பளித்தார். சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருட சிறை தண்டனை பெற்று அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா பெங்களூர் சிறையில் உள்ள நிலையிலும் சிரித்தபடியே முதல்வராக பதவியேற்றார் எடப்பாடி பழனிச்சாமி. ஜெயலலிதாவிற்கு 100 கோடி ரூபாய் அபராதமும், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கும் தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து இதே பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் அடைக்கப்பட்டனர். அப்போது ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சரவை பதவியேற்றது. ஜெயலலிதா சிறையில் இருப்பதால் முதல்வராக பதவியேற்ற பன்னீர்செல்வம் அழுதபடியே பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துகொண்டார். இதையடுத்து பதவியேற்ற அமைச்சர்களும் தேம்பி, தேம்பி அழுதனர். இந்நிலையில் தற்போதும், சொத்துக் குவிப்பு வழக்கிற்காக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதிலும் உச்சநீதிமன்றமே குற்றவாளி என்று தீர்ப்பளித்துவிட்டது. அப்படியிருந்தும் எடப்பாடியார் தலைமையிலான இன்றைய அமைச்சரவையில் யாருமே அழவில்லை. எடப்பாடியார் உள்ளிட்டோர் சிரித்தபடியே பதவியேற்றது ஆச்சரியமூட்டியது. இந்த தகவல் சசிகலாவுக்கு எட்டினால் அவர் இதை எப்படி எடுத்துக்கொள்வார் என்ற எதிர்பார்ப்பு அதிமுக வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது.