தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கோயம்புத்தூரில் இன்று பிற்பகல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொண்டுவர நினைத்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துவோம். புதுக்கோட்டை பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தில் விவசாயிகள் பாதிக்காத வகையில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயிகள் நலனே அரசுக்கு முக்கியம். நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கக் கோரி வரும் 27-ஆம் தேதி பிரதமர் மோடியை சந்திக்க உள்ளேன். அப்போது நீட் தேர்வினால் தமிழக மானவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை எடுத்துச் சொல்ல உள்ளேன். கோவை மாநகரப் பகுதியில் மோனோ ரயில் சேவை கொண்டு வரப்படும். கோவை அரசு மருத்துவமனை 300 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்படும்.மேலும், வெள்ளக் கோவில் பகுதியில் 120 கோடி மதிப்பீட்டில் ஒருங்கினைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும். மத்திய அரசு அனுமதி அளித்தவுடன் அத்திக்கடவு – அவினாசி திட்டம் தொடங்கபடும். இன்னும் 5 நாட்களுக்குள் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார். முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, புதிய முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி முதன் முறையாக பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.