ஈரானின் கெர்மான் மாகாணத்தின் தென்பகுதியில் உள்ள சுற்றுலா தலமாக விளங்கும் சிர்க் பகுதியில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது கடல் மட்டத்திலிருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது என்றும், 5.4 ரிக்டர் அளவுகோலில் பதிவானது என்றும் வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்டதால் வீடுகளை விட்டு வெளியே வந்த மக்கள் சாலைகளில் ஒன்றுகூடினர்.
அந்த பகுதியில் தொடர்ந்து சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால், பொதுமக்கள் யாரும் வீடுகளுக்கு செல்லவில்லை. சில கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. பெரும்பாலான சுவர்களில் விரிசல் காணப்படுகிறது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு, பொருட்சேதம் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.