அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார மையங்களில் விடுமுறை நாட்களிலும் மருத்துவர்கள் பணியில் இருப்பார்கள் என அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் முழுவதுமாக கட்டுப்படுத்தப்படும் என கூறிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான தனிப்பிரிவை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் காய்ச்சலுக்கான அறிகுறி தோன்றினால் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும்.
பொதுமக்கள் எந்த நேரத்திலும் சிகிச்சை பெறும் வகையில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் இருப்பார்கள். விடுமுறை நாட்களிலும் அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார மையங்களிலும் பொதுமக்கள் சிகிச்சை பெறலாம்” என தெரிவித்துள்ளார்.