திமுக எம்.பிக்கள் மத்திய சுகாதாரத் துறை மந்திரி ஜே.பி.நட்டாவை நேற்று நேரில் சந்தித்தனர். அப்போது, நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி திமுக எம்.பிக்கள் நட்டாவிடம் மனு அளித்தனர். இந்த சந்திப்பின் போது, டிகேஎஸ் இளங்கோவன், ஆர்.எஸ். பாரதி மற்றும் திருச்சி சிவா ஆகிய திமுக மாநிலங்களவை எம்.பிக்கள் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி சிவா, மனுவை பெற்றுக்கொண்ட நட்டா இது தொடர்பாக துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி நாளை முடிவு அறிவிக்கப்படும் என கூறியதாக தெரிவித்தார். நீட் தேர்விலிருந்து விலக்குப்பெற நடவடிக்கை எடுக்காமல் தமிழக அமைச்சர்கள் தங்களது பதவியை காப்பாற்றிக்கொள்வதிலேயே குறியாக இருப்பதால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் திருச்சி சிவா குற்றம்சாட்டினார்.
நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து திமுக எம்.பிக்கள் நட்டாவை சந்தித்தனர். இதனிடையே நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக அதிமுக அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்களும் பிரதமர் மோடி உள்ளிட்ட பலரை சந்தித்து வலியுறுத்தி வருகின்றனர்.