சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் மீதான தாக்குதலைக் கண்டித்து ஆளுநர் மாளிகை முன்பாக திமுக எம்எல்ஏக்கள் போராட்டம் நடத்தினர். சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தொடரில் ரகசிய வாக்கெடுப்பு கோரி திமுக உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவையில் இருந்து திமுகவினர் குண்டுக்கட்டாக தூக்கி வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து நடந்த வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு வென்றது. இந்தநிலையில், ஸ்டாலின் மீதான தாக்குதல் தொடர்பாக ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் புகார் அளிக்க திமுக எம்எல்ஏக்கள் ராஜ் பவன் சென்றனர்.
ஆளுநரிடம் புகார் அளிக்கச் சென்ற திமுக எம்எல்ஏக்கள் ஆளுநர் மாளிகை முன்பாக திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்எல்ஏ மா.சுப்ரமணியன், சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் மீது காவலர்களை ஏவி காட்டுமிராண்டித்தனமாக சபாநாயகர் நடந்துகொண்டதாகக் குற்றம்சாட்டினார். அடக்குமுறைகளுக்கு அஞ்சமாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏக்கள் கோஷங்களை எழுப்பினர்.