அ.தி.மு.க.வில் தற்போது நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் பொதுக்குழு கூட்டம் நாளை (செவ்வாய்கிழமை) காலை 10.35 மணிக்கு சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில், சுமார் 3 ஆயிரம் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
அவர்களுக்கான அழைப்பு கடிதம் கொரியர் பதிவு தபால் மூலம் அனுப்பப்பட்டு உள்ளது. கூட்டத்திற்கு வரும்போது, பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கவருடன் கூடிய அழைப்பிதழை உடன் கொண்டுவர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதிமுக பொதுக்குழுவை கூட்டுவதற்கு தினகரன் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. பொதுக்குழுகூட்டத்திற்கு எதிரான டிடிவி தினகரன் அணியின் எம்எல்ஏ வெற்றிவேலின் மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க மறுத்த ஐகோர்ட்டு, நீதிமன்றத்தில் நேரத்தை வீணடித்ததற்காக வெற்றிவேலுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்ததது. தனிப்பட்ட முறையிலே வழக்கு தொடரப்பட்டு உள்ளது என ஐகோர்ட்டு கூறிஉள்ளது.