தோனி ‘சிஎஸ்கே’ அணியில் இல்லை – ரசிகர்கள் அதிர்ச்சி

2008ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் டி20 தொடர் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்தொடர் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து 2015 வரை, தோனி கேப்டன்ஷிப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி, பங்கேற்று வந்தது. இந்த தொடரில் மூன்று முறை சிஎஸ்கே அணி, சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளது. இதனிடையே, 2013இல் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக புகார் எழுந்தது. 

இதனால், இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் ஒரு குழுவை நியமித்தது. அதன்படி, அந்த குழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது. இதனை தொடர்ந்து, 2015இல் சூதாட்டத்தில் ஈடுபட்ட அணிகளின் நிர்வாகிகளுக்கு துணை போன சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதித்து உத்தரவிடப்பட்டது. இந்த அணிகளின் உரிமையாளர்கள் குருநாத் மெய்யப்பன், குந்த்ரா ஆகியோருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. 

இதனிடையே, இந்த ஆண்டு ஜூலை மாதம் இந்த இரு அணிகளுக்கான தடை நீங்கியதை அடுத்து, அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் களமிறங்க உள்ளன. இதில், சிஎஸ்கே அணியை சென்னை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.  முன்னர் ஒருமுறை, ஐசிசி மற்றும் பிசிசிஐ-ன் முன்னாள் தலைவரும், குருநாதின் மாமனாருமான என்.ஸ்ரீனிவாசன் பேட்டி அளிக்கையில், 2018ஆம் ஆண்டு தோனியுடன் சிஎஸ்கே அணி, கோலாகலமாக களமிறங்கும் என்று தெரிவித்திருந்தார். அதேபோல், ஐபிஎல் நிர்வாகக் குழுவும், விரைவில் ஏலம் தொடர்பான முடிவுகளை எடுக்கவுள்ளது. ஆனால், அந்த ஏலத்தில் தோனி, சிஎஸ்கே அணிக்கு மீண்டும் திரும்புவது கஷ்டம் தான் என்று கூறியுள்ளார் முன்னாள் வீரர் நிகில் சர்மா. 

அவர் தெரிவிக்கையில், “ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போகவுள்ள முதல் ஐந்து வீரர்களின் பட்டியலில் தோனி இருப்பார். அவருடைய கேப்டன்ஷிப் பற்றி சொல்லவேண்டியதில்லை. அவர் எந்த அணியில் இருந்தாலும், போட்டியில் வெற்றி காண்பார். எனவே ஏலத்தில், தோனியை தங்கள் பக்கம் இழுக்க, அனைத்து அணிகளின் உரிமையாளர்களுக்கும் நடுவே கடும் மோதல் ஏற்படும் என்பதில் துளியும் சந்தேகமில்லை” என்றார்.