இளவரசன் மரணம் தற்கொலைதான் – உயர்நீதிமன்றம்

 

தர்மபுரி மாவட்டம் நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசன் மற்றும் செல்லன்கொட்டாயைச்சேர்ந்த திவ்யா ஆகியோர் காதலித்து 2013-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் காதல் கலப்பு திருமணத்தால் வேதனை அடைந்த திவ்யாவின் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து இருவேறு பிரிவினர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. 

இதில் நத்தம் காலனி அண்ணாநகர் மற்றும் கொண்டாம்பட்டி பகுதி மக்களின் வீடுகள் மற்றும் உடமைகள் சேதப்படுத்தப்பட்டன. மேலும் பல குடிசைகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இந்த சூழ்நிலையில் இளவரசனுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை என திவ்யா தெரிவித்தார். அதன்பின்னர் இளவரசன், தர்மபுரி அரசு கலைக்கல்லூரியின் பின்புறத்தில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். அவரது மரணம் குறித்து சமூக ஆர்வலர்களும் தனிநபர்களும் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டனர். இளவரசனின் தந்தை தனது மகன் இறப்பில் பல்வேறு சந்தேகம் இருப்பதாக புகார் கூறினார். இளவரசனின் மர்ம மரணம் குறித்த வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு மாற்றக்கோரி இளவரசனின் தந்தை இளங்கோ சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

உயர்நீதிமன்ற உத்தரவின்படி இவ்வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.சி.ஐ.டி. சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இளவரசன் தற்கொலை செய்து கொண்டதாக வாதிட்டார். அவரது வாதத்தை ஏற்ற நீதிபதிகள், இவ்வழக்கை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்தனர்.