நான்கு தலைமுறையாகப் பாடி கின்னஸ் சாதனை படைத்து உலகெங்கிலுமுள்ள திரை ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்த எஸ். பி. பாலசுப்பிரமணியம் கடைசியாகப் பாடிய பாடல் ‘என்னோட பாஷா’ என்கிற பாடல். இது ‘தேவதாஸ் பார்வதி’ என்கிற படத்திற்காகப் பாடப்பட்டது .இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் ஆர்ஜிகே எனப்படும் ஆர்.ஜி.கிருஷ்ணன்.
இந்த ‘தேவதாஸ் பார்வதி’ அமேசான் பிரைம் டைமில் OTT தளத்தில் வெளியாகவுள்ளது.
எஸ்.பி.பி ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடி இருந்தாலும் அவரது கடைசிப் பாடல் இடம் பெற்றது என்கிற வகையில் இந்தப் படத்தில் வரும் அந்தப் பாடல் உலகின் கவனம் பெற்று ள்ளது.
‘தேவதாஸ் பார்வதி’ ஒரு ஆந்தாலஜி படமாகும். அதன் கதை பிடித்துப்போய் தான் எஸ்பிபி இப்படத்திற்காகப் பாடினார். அந்தப் பாடலை 2020 ஜூலை இறுதியில் பாடிக் கொடுத்தார். ஆகஸ்டில் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.
ஒரு உலக மகா இசைக்கலைஞனின் இறுதிப்பாடல் தன் படத்தில் இடம் பெற்றதற்காகப் பெருமையும் துயரமும் கலந்த உணர்வு கொந்தளிப்பில் இருக்கிறார் இயக்குநர் ஆர்ஜி கே.
இந்தப்படத்தில் ராஜ் எம்.ஆர்.கே நாயகனாக நடித்திருக்கிறார் ஸ்மிருதி வெங்கட் நாயகியாக நடித்திருக்கிறார் .இவர்கள் தவிர பாரதாநாயுடு, பூர்ணிமா ரவி, ராகுல் தாத்தா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை மலேசியா சுபாஷ்கரன் தயாரித்துள்ளார் .வினோத் ராஜேந்திரன் ,மனீஷ் மூர்த்தி ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். தமிழ்க்குமரன் படத்தொகுப்பு செய்துள்ளார். என் .வி. அருண் இசையமைத்துள்ளார்.
‘என்னோட பாஷா’ என்கிற அந்தப் பாடலை ஹர்ஷா எழுதியுள்ளார்.தமிழில் எஸ்பிபி பாடிய முதல் பாடலை புலமைபித்தன் எழுதியிருந்தார். இறுதிப்பாடலை இளைஞர் ஹர்ஷா எழுதியிருக்கிறார்.
இப்படத்திற்காக எஸ்பிபியிடம் பாடக் கேட்டபோது கதையைக் கேட்டு இருக்கிறார். அவருக்குக் கதை பிடித்துப் போய்விடவே பாடச் சம்மதித்திருக்கிறார். அதே இளமை உற்சாகத்துடன் பாடியும் கொடுத்திருக்கிறார். இந்தப் பாடல் பதிவான அனுபவத்தை எண்ணி எண்ணி படக்குழுவினர் நெகிழ்ச்சியில் நனைந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்தப் பாடலை இயக்குநர்கள் கே.எஸ் .ரவிக்குமார்,விக்னேஷ் சிவன், அரசியல்வாதி எச்.ராஜா, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ,பிரியா வாரியார் ,தயாரிப்பாளர் லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் போன்ற பிரபலங்கள் பலரும் தங்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டு பிரமாண்டமான வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள்.
‘தேவதாஸ் பார்வதி’ ஒரு பைலட் திரைப்படம். இதன் விரிவான முழுநீள திரைவடிவம் விரைவில் உருவாக இருக்கிறது.பைலட் திரைப்படம் என்றாலும் பிரம்மாண்டமான செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.
தன் இறுதிப்பாடலை எஸ்பிபி பாடியதன் மூலம் தங்கள் படத்திற்கு ஒரு அழுத்தமான முகவரியைக் கொடுத்து சென்றுள்ளார் என்று பூரித்துக் கொண்டு இருக்கிறது படக்குழு.