கடந்த 2008ஆம் ஆண்டு நெல்லை மாவட்டத்தில் இருந்த இளையரசனேந்தல் குறுவட்டம் நிர்வாக வசதிக்காக தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. நீதிமன்றம், காவல் நிலையம், கல்வி, அரசு மருத்துவமனை என அனைத்து அரசு நிர்வாகங்களும் கோவில்பட்டி கோட்டத்துடன் இணைக்கப்பட்டது. ஆனால் இளையரசனேந்தல் குறுவட்டத்தில் உள்ள 12 ஊராட்சிகள் மட்டும் நெல்லை மாவட்டத்தில் உள்ள குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்துடன் உள்ளது.
இதனால் மக்கள் பணிகள் எதுவும் நடக்கவில்லை என்றும், நீண்ட கால கோரிக்கையான இளையரசனேந்தல் குறுவட்ட 12 ஊராட்சிகளை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்க வேண்டும், இந்த பகுதிமக்கள் பயன்படுத்து விதமாக மின்சார அலுவலகத்தினை கோவில்பட்டி நிர்வாக எல்கைக்குள் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இளையரசனேந்தலில் தமிழ் விவசாயிகள் சங்கம் மற்றும் பகத்சிங் மன்றம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் ஓ.ஏ.நாரயணசாமி தலைமை வகித்தார்.முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன், முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் முருகன், 5வது தூண் தலைவர் சங்கரலிங்கம், தமிழ்விவசாயிகள் சங்க வடக்கு மாவட்ட தலைவர் ஜெயகண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சீத்தாராமன் ஆர்ப்பாட்டத்தினை தொடங்கி வைத்தார். பகத்சிங் மன்ற துணைத்தலைவர் உத்தண்டுராமன் கண்டன உரையாற்றினார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான மக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.