8ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி கைவிடப்படுகிறது

கல்வி உரிமைச் சட்டம், பிரிவு 16இன்கீழ் கடந்த 2010ஆம் ஆண்டு, 8ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறை கொண்டு வரப்பட்டது. ஏனெனில், குழந்தைகள் தேர்வில் தோல்வி அடைந்தால், மீண்டும் அதே வகுப்பில் படிக்க வைப்பது அவர்களை மனச்சோர்வடையச் செய்யும், சில நேரங்களில் பள்ளிப்படிப்பை கைவிட வேண்டியது இருக்கும் என்பதால் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது.  ஆனால் சமீபத்தில் இந்த முறையால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாகவும், அதனால் இதை கைவிட வேண்டும் என்றும் மத்திய அரசிடம், 24 மாநில அரசுகள் கேட்டுக்கொண்டன.

இந்நிலையில், கல்வி உரிமை சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதாவை, நேற்று பாராளுமன்றத்தில் மத்திய இணை அமைச்சர் உபேந்திர குஷ்வாகா தாக்கல் செய்தார். இதன்படி, 5 முதல் 8 வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் மார்ச் மாதம் நடைபெரும் இறுதி தேர்வில் தோல்வி அடைந்தால், அவருக்கு மே மாதம் மீண்டும் தேர்வு நடத்தி தேர்ச்சி பெற ஒரு வாய்ப்பு வழங்கப்படும். அப்போதும் அவர் தோல்வி அடைந்தால் மட்டுமே, அவர் அதே வகுப்பில் மீண்டும் படிக்க அமர்த்தப்படுவார் என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது