ஃபாக்ஸ் ஆபிஸை கலக்கி வரும் ஜெயம் ரவியின் “கோமாளி”

ஜெயம் ரவி நடித்த கோமாளி திரைப்படம் ஃபாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. இப்படத்திற்கு ரசிகர்களிடம் கிடைத்திருக்கும் வரவேற்பு படக்குழுவினரே எதிர் பாராதது.

இப்படத்தின் விநியோகஸ்தர்கள் இதுவரை வெளிவந்த ஜெயம் ரவி படங்களிலேயே இந்த கோமாளி திரைப்படம்தான் அதிக வசூலை பார்த்துள்ளதாக மிகுந்த சந்தோஷத்துடன் கூறியுள்ளனர். இது இப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷிற்கு இரட்டிப்பு சந்தோஷத்தை கொடுத்துள்ளது. தயாரிப்பாளருக்கு இந்த வருடத்தில் இது இரண்டாவது மிகப்பெரிய வெற்றி. நடிகர் RJ பாலாஜி, பிரியா ஆனந்த் நடிப்பில் வெளியான “LKG” திரைப்படம் இவர்களது முதல் வெற்றித் திரைப்படம்.

தற்போது கோமாளி படக் குழுவினர் இப்படத்தின் வெற்றியை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இப்படத்தில் நடிப்பில் கலக்கியுள்ள ஜெயம் ரவிதான் இந்த நிறுவனத்தின் ஆஸ்தான நடிகர் என்று தயாரிப்பாளர் பெருமையுடன் பல மேடைகளில் பேசி வருகிறார்.அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் தற்போது வெற்றியின் உச்சத்தில் இருக்கிறார்.

கோமாளி படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இப்படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவருக்கும் தனது நன்றியை தெரிவித்து அனைவருக்கும் தங்க காசு பரிசாக கொடுத்துள்ளார். மேலும் திரைப்படத் துறையில் இளம் மற்றும் புதிய திறமைகளை ஊக்குவிப்பதற்கும் அறிமுகப்படுத்துவதற்கும் மிகவும் பிரபலமாகி வருகிறார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.

“LKG”, “கோமாளி” என்று தொடர்ச்சியான இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்னேஷனல் அடுத்தடுத்து நல்ல நல்ல படங்களை தயாரித்து வெளியிடுவதில் முனைப்பு காட்டி வருகின்றது. வருண், சம்யுக்தா, யோகிபாபு நடிப்பில் உருவான “பப்பி” படத்தை கூடிய விரைவில் வெள்ளித்திரையில் பார்க்கலாம். நல்ல நல்ல கதையம்சம் கொண்ட கதைகளை தேர்ந்தெடுத்து தயாரித்துக் கொண்டிருக்கும் வேல்ஸ் நிறுவனம் வெளியிடும் படங்களை நம்பி வாங்குகின்றனர் விநியோகஸ்தர்கள்.

ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா, யோகிபாபு மற்றும் KS ரவிகுமார் நடிப்பில் கோமாளி திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகி இன்று வரை ஹவுஸ் புல் லாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் ஹிப்ஹாப் ஆதியின் இசையில் அணைத்து பாடல்களும் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ரிசெர்ட் M நாதன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இப்படத்தினை இயக்கியுள்ளார்.