தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இன்று போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று விவசாயிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். சென்னை அண்ணா சாலையில் இன்று மாணவர்கள் மறியல் போராட்டம் நடத்தினார்கள்.
தகவல் அறிந்ததும் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கலைந்து செல்லுமாறு கூறினார்கள். ஆனால் அவர்கள் கலைய மறுத்து விட்டனர். இதையடுத்து மாணவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று போலீஸ் வேனில் ஏற்றினார்கள். சென்னை கெல்லீசில் சட்டக் கல்லூரி மாணவர்கள் விடுதி உள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவாக இங்கு சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இன்று 4-வது நாளாக அவர்களது போராட்டம் நீடிக்கிறது. இதேபோல் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை மாநிலக் கல்லூரியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள். பொன்னேரியில் உள்ள அரசு கல்லூரி முன்பு இன்று காலை மாணவ- மாணவிகள் போராட்டம் நடத்தினார்கள். பின்னர் அங்கிருந்து பொன்னேரி பழைய பஸ் நிலையம் அண்ணா சிலை வரை ஊர்வலமாக சென்றனர். இந்த போராட்டத்தில் 2000த்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
புதுவை சட்டக்கல்லூரி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் இன்று வகுப்புகளை புறக்கணித்து விட்டு வெளியேறினர். பின்னர் அவர்கள் புதுவை கடற்கரை சாலைக்கு வந்தனர். அங்கு கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதேபோல் கோவையில் இன்று வேளாளர் கல்லூரி மாணவ- மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு போராட்டம் நடத்தினர். இதில் 100 கணக்கான மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.