கோவாவின் வடக்கு பகுதி கூடுதல் கலெக்டராக பணியாற்றி வருபவர் சபாஜி ஷெட்யே. வெடிப் பொருட்களை சேமித்து வைப்பதற்கு தடையில்லா சான்றிதழுடன் அனுமதி வழங்குமாறு வந்த விண்ணப்பத்தை பரிசீலித்த இவர், அதற்கு ஒன்றரை லட்சம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என பேரம் பேசியுள்ளார். இதனால், வேதனையடைந்த விண்ணப்பதாரர், இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் அவர் புகார் அளித்தார். இதையடுத்து, சபாஜி ஷெட்யே-வை கைது செய்ய அதிகாரிகள் வலை விரித்தனர்.
இதனையடுத்து, ரசாயன கலவை தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை அவர்கள் தந்தனுப்பினர். பேசிய லஞ்சப் பணத்தில் முதல் தவணையாக 25 ஆயிரம் ரூபாயை தருவதற்கு தயாராக இருப்பதாக கூடுதல் கலெக்டரிடம் அவர் தெரிவித்தார். இன்று மேற்படி தொகையை கூடுதல் கலெக்டர் சபாஜி ஷெட்யே பெற்றுகொண்டபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.