80களில் கொடிகட்டிப் பறந்த தென்னக திரையுலக பிரபலங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட நாளில் ஒன்று கூடி கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தொடர்ந்து 8வது ஆண்டாக இந்த ஆண்டும் ஒன்று கூடியுள்ளனர். இந்த ஆண்டு மகாபலிப்புரத்தில் கடற்கரையை ஒட்டியுள்ள இண்டர்காண்டினண்ட்டல் ரெசார்ட்ஸ் (Intercontinental Resorts) விடுதியில் நடைபெற்ற இந்த ஒன்றுகூடல் நிகழ்வுக்கு அனைவரும் ஊதா நிற உடையனிந்து கடந்த 17ஆம் தேதி காலை அனைவரும் சங்கமமானார்கள். அந்த இடம் முழுவதும் ஊதா நிற பூக்கள் உள்ளிட்ட கலை பொருட்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு இவர்களது கொண்டாட்டங்கள் இரண்டு நாட்களுக்கு நீண்டுள்ளது.
இரவு 7 மணிக்கு அங்குள்ள கூடத்தில் நடைபெறவிருந்த நிகழ்ச்சிக்கு ஒவ்வொரு பிரபலமாக வரத்துவங்க, நடிகை சுஹாசினி மற்றும் நடிகை லிசி ஆகியோர் நடிகர் ராஜ்குமார் சேதுபதி, நடிகை பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் குஷ்பு துணையுடன் அனைவரையும் உபசரித்தனர். அதன் பின்னர் மும்பை, கேரளா, பெங்களூரு, ஹைதரபாத் சேர்ந்த ஒவ்வொரு திரையுகை சேர்ந்த பிரபலங்களும் வந்த வண்ணம் இருந்தனர்.
அதன் பின்னர் நடைபெற்ற கூட்டு புகைப்படத்தில் இந்திய திரையுலகை சார்ந்த 28 பிரபலங்கள் ஊதா வண்ண உடையுடன் கலந்து கொண்டனர். இந்தக் கேளிக்கையில் ஓர் அங்கமாக 1960 மற்றும் 70களில் வெளிவந்து பிரபலமான இந்தி மெல்லிசைப் பாடல்களை நடிகர்கள் ரேவதி, குஷ்பு, சுரேஷ், ரம்யா, சுமலதா, நரேஷ், ராதிகா, சரத்குமார் ஆகியோர் பாடி மகிழ்ந்துள்ளனர். இதில் ரேவதி மற்றும் குஷ்புவுக்கு பரிசும் வழங்கப்பட்டுள்ளது.
இதோடு அல்லாமல் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ராம்ப் வாக்கும் நடைபெற்று அதில் சிரஞ்சீவி தலைமையிலான ஆண்கள் அணி வெற்றி பெற்றது. பாடகர் ஸ்ரீராம் பாலிவுட் புகழ் பூணம், ஜாக்கி ஷ்ரோப், தென்னிந்திய புகழ் பாக்யராஜ், வெங்கடேஷ், சுரேஷ் ஆகியோர்களின் படங்களில் இடம்பெற்ற பாடல்களை பாடினார். பின்பு அந்த பாடலின் நிகழ்வுகளை பிரபலங்கள் நினைவுக்கூர்ந்தனர்.
அதன் பின்னர் இரண்டாவது நாளாகத் தொடர்ந்த இந்த சந்திப்பில் ஆன்மீகம் உள்ளிட்ட சில தலைப்புகளை விவாதித்தனர். இந்த சந்திப்பிற்கு பின்னர் அதில் கலந்து கொண்ட 28 பிரபலங்களும் 19ஆம் தேதி பிரியா விடை பெற்று தங்கள் ஊர்களுக்குத் திரும்பினர்.