தமிழ் சினிமாவில் செலக்ட்டிவாக படங்களையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்கும் சில நடிகைகள் படங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் திரையுலகில் நீண்ட நாட்கள் நிலைத்து நின்று பயணிப்பார்கள். அப்படி இருக்கும் வெகுசில நடிகைகளில் நடிகை கோமல் சர்மா தவிர்க்க முடியாத ஒருவர். தமிழில் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய சட்டப்படி குற்றம் என்கிற படத்தில் அறிமுகமான கோமல் சர்மா ‘அமைதிப்படை-2’, ‘வைகை எக்ஸ்பிரஸ்’, ‘ஷாட் பூட் த்ரீ’, ‘பப்ளிக்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் மலையாளத்தில் ‘இட்டிமானி’, ‘மரக்கார்’ மற்றும் பாலிவுட்டில் ‘ஹங்கமா-2’ படங்களில் நடித்ததன் மூலம் ஒரு பான் இந்திய நடிகையாகவே மாறியுள்ளார் கோமல் சர்மா.
வாய்ப்புகளை தேடி செல்வதை விட தனது நடிப்பிற்காக தன்னை தேடி வரும் நல்ல படங்களை மட்டுமே ஒப்புக்கொண்டு நடித்து வரும் கோமல் சர்மாவிற்கு இந்த வருடம் மட்டுமே தமிழிலும் மலையாளத்திலும் கிட்டத்தட்ட நான்கு படங்கள் ரிலீஸுக்காக காத்திருக்கின்றன. நான்குமே பெரிய படங்கள். சமீபத்தில் தனக்கு கோல்டன் விசா கிடைத்தது குறித்தும் தனது திரையுலக பயணத்தில் அடுத்தடுத்து வெளியாக இருக்கும் படங்கள் குறித்தும் உற்சாகமாக நம்மிடம் பகிர்ந்து கொண்டார் கோமல் சர்மா.
“காத்திருப்பு எப்போதுமே வீண் போவது இல்லை என்பது போல இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ படத்தில் நடிப்பதற்காக தேடி வந்த வாய்ப்பை பிரியதர்ஷன் சாரின் டைரக்சனில் ஹிந்தியில் உருவான ‘ஹங்கமா-2’வில் நடித்து வந்ததால் ஏற்க முடியாமல் போனது. ஆனால் இப்போது அவருடைய டைரக்சனில் ‘கோட்’ படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.
அவருடன் ‘ஷாட் பூட் த்ரீ’ படத்தில் நடித்தபோது நன்கு பழகி இருக்கிறேன். அவருக்குள் ஒரு அற்புதமான நடிகரும் ஒளிந்து இருக்கிறார். இன்னொரு பக்கம் திறமையான தொழில்நுட்பங்களை, புதுப்புது கண்டுபிடிப்புகளை சினிமாவில் புகுத்த வேண்டும் என்கிற வேட்கையும் அவரிடம் இருக்கிறது. ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பில் அதை அவர் செயல்படுத்தியதை நேரடியாகவே பார்க்க முடிந்தது.
‘கோட்’ படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து நடிக்கும் காட்சிகள் நிறைய இருக்கிறது. அவர் மட்டுமல்ல பிரபுதேவா, பிரசாந்த், மோகன் என மற்ற நடிகர்களுடனும் நடிக்கும் மிகப்பெரிய வாய்ப்பு இந்த ‘கோட்’ படத்தின் மூலம் எனக்கு கிடைத்துள்ளது. விஜய்யை ‘பவர் ஆப் தி டேலண்ட்’ என்று சொன்னால் சரியாக இருக்கும்.. நடிப்பில் மேஜிக்கை நிகழ்த்த கூடிய ஒரு அற்புதமான நடிகர். ‘கோட்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக மட்டுமல்ல, தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அலையை உருவாக்கும் படமாகவும் இருக்கும்.
மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் முதன்முறையாக இயக்குனராக மாறி வரலாற்றுப் பின்னணி கதையம்சத்துடன் மலையாளத்தில் ‘பரோஸ்’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்தில் உலகத்தரம் வாய்ந்த சர்வதேச நட்சத்திரங்களுடன் நானும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி. இந்த படத்தில் பல சர்வதேச தொழில்நுட்ப கலைஞர்கள் இணைந்து பணியாற்றி வருகிறார்கள். அந்த படமும் இந்த வருடம் உலகளவில் திரையரங்குகளில் வெளியாக தயாராகி வருகிறது..
இது தவிர சதீஷ் குமார் இயக்கும் பெண்டுலம் என்கிற படத்தில் நடித்து வருகிறேன். மேலும் இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் விகர்ணன் அசோக் இயக்கும் மாஸ்க் என்கிற படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். மிகவும் திறமையான இயக்குநர், வித்தியாசமான ஒரு கதையுடன் வந்துள்ளார். இந்த படம் வெளியான பிறகு தமிழ் சினிமாவில் அவர் ரொம்ப தூரம் போவார்.
இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் ஹிந்தியில் மீண்டும் ‘அயோத்தியா’ என்கிற படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன் அந்தப் படமும் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. இன்னொரு பக்கம் பாலிவுட்டிலும் இரண்டு படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளேன். அந்தப் படங்கள் வரும்போது என்னுடைய திரையுலக பயணத்தில் புதிய மாற்றம் நிகழும் என்பது உறுதி” என்கிறார் நம்பிக்கையுடன்.
அதுமட்டுமல்ல இன்னொரு பக்கம் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹைனா இசையில் சர்வதேச தரத்தில் உருவாகி வரும் இசை ஆல்பத்திலும் கோமல் சர்மா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநர் மணிகண்டன் இந்த ஆல்பத்தை இயக்குகிறார். இத்தனை படங்களில் தான் நடித்து வருவது குறித்து ஆர்வமுடன் கூறும்போதே கோமல் சர்மாவின் கண்களில் மகிழ்ச்சி மின்னல் அடிக்கிறது.
சமீபத்தில் இவருக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கவிரவித்தது. அதன்பிறகு பலரும் இவரை இப்போது செல்லமாக ‘கோல்டன் கேர்ள்’ என்றே அழைக்க ஆரம்பித்து விட்டார்களாம்.
“இப்படி ஒரு கவுரவம் கிடைத்ததில் மிகப்பெரிய மகிழ்ச்சி. இந்த இந்த கோல்டன் விசாவை தற்போது எனக்கு வழங்கியதற்காக ஐக்கிய அரபு அமீரக அரசுக்கு மிகப்பெரிய நன்றி. ஸ்குவாஷ் போட்டிகளில் நாட்டுக்காக விளையாடிய ஒரு விளையாட்டு வீராங்கனையாக, மிஸ் சவுத் இந்தியாவாக, பல இந்திய படங்களில் நடித்த நடிகையாக மற்றும் ஒரு சமூக ஆர்வலாராக என் திறமை மீது நம்பிக்கை வைத்த, எக் டிஜிட்டல் ( ECH Digital) நிறுவனத்தின் சிஇஓ திரு. இக்பால் மார்கோனி அவர்களுக்கு என் மனப்பூர்வ நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அவருடைய மாறாத ஆதரவு விலை மதிப்பற்றது. இதுபோன்ற கவுரவத்தால் எனது பொறுப்புகள் இன்னும் அதிகமாகவதாக உணர்கிறேன். இது என்னுடைய எல்லைகளை விரிவாக்கி இன்னும் பல நல்ல விஷயங்களை செய்வதற்கு உந்து சக்தியாக அமையும்.” என்கிறார் கோமல் சர்மா நம்பிக்கையுடன்.