சமீபத்தில் யோகிபாபு நடித்த காக்டெய்ல் என்கிற படம் Zee5 தளத்தில் வெளியானது. இதில் யோகிபாபுவின் நண்பனாக ஏஜெண்ட் என்கிற கேரக்டரில் பளிச்சென அறிமுகமாகியுள்ளார் நடிகர் கவின்..
ஏற்கனவே சில படங்களில் நடித்திருந்தாலும், காக்டெய்ல் இவருக்கு நிரந்தர முகவரியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது..
சினிமாவில் தான் நுழைவதற்கு நடத்திய முதல் போராட்டம் காக்டெய்ல், அடுத்ததாக வெளியாக இருக்கும் டேனி ஆகிய படங்களில் நடித்த அனுபவம் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார் கவின்.
“மதுரையில் வசதியான குடும்பத்தை சேர்ந்தவன் நான்..
ஆனால் படிப்பு ஏறாததால் பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்தி விட்டேன்.
சினிமாவில் நடிக்கும் ஆர்வத்தை வீட்டில் சொன்னபோது பயங்கர எதிர்ப்பு எழுந்தது.
அவர்களை சமாதனப்படுத்துவதற்காக வாரத்தில் ஐந்து நாட்கள் வியாபாரத்தை பார்த்துக்கொண்டு மீதி இரண்டு நாட்கள் கார் எடுத்துக்கொண்டு மதுரை பகுதிகளில் நடக்கும் படப்பிடிப்புகளை பார்க்க கிளம்பி விடுவேன்..
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் அண்ணன் மகன் எனக்கு நண்பர் என்பதால் அவர் இயக்கிய ஈரநிலம் படப்பிடிப்பில் உதவியாக வேலை பார்த்தேன்.
தமிழகத்தின் முதல் பெண் மேயராக மதுரையில் பொறுப்பேற்றவர் என் அத்தை..
அவரது மகளுக்கும் எனக்கும் திருமணம் நடத்தி வைத்த மு.க.அழகிரி சினிமாவை நினைத்துப் பார்க்கக் கூடாது என எனக்கு அன்புக்கட்டளை போட்டார்.
அப்படியே ஐந்து வருடம் போனதும் மதுரை அருகில் வாகை சூடவா படப்பிடிப்பு நடத்த வந்த இயக்குநர் சற்குணம், விமல் எனக்கு பழக்கமானார்கள்.
இப்போதும் சென்னை வந்தால் விமலின் வீட்டில் சென்று தங்கும் அளவுக்கு அந்த நட்பு வளர்ந்துவிட்டது.
இந்த நிலையில் இயக்குநர் சற்குணம் தயாரித்த ‘மஞ்சப்பை’ படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் அய்யா ராஜ்கிரணுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
பின்னர் சண்டிவீரன் படத்தில் வில்லன் நடிகர் லாலின் மகனாக நடித்தேன்.
அப்போதுதான் அந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பி.ஜி.முத்தையாவுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது.
அதன்பிறகு பி.ஜி.முத்தையா தயாரிப்பாளராக மாறி ராஜா மந்திரி, பீச்சாங்கை உள்ளிட்ட சில படங்களை தயாரித்தார்.
திடீரென 2019 புத்தாண்டு அன்று போன் செய்து தன்னுடைய உதவியாளர் சந்தான மூர்த்தி இயக்கத்தில் தான் தயாரித்துவரும் டேனி என்கிற படத்தில் ஒரு போலீஸ்காரர் கேரக்டரில் நடிக்க அழைத்தார்.
கதாநாயகியை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தில் வரலட்சுமி நடித்துள்ளார்.
இப்படத்தில் நடிக்க வேண்டிய நடிகர் ஒருவர் சில காரணங்களால் விலகிவிட, அந்த நேரத்தில் பிஜி முத்தையாவுக்கு பளிச்சென என் ஞாபகம் வந்ததால் என்னை அழைத்து நடிக்க வைத்தார்.
படம் முழுவதும் வரும் முக்கியமான கேரக்டர்.. இதில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்து.
இந்த நேரத்தில் தான் பிஜி முத்தையா ‘காக்டெய்ல் என்கிற படத்தையும் தயாரித்து வந்தார்.
ஒருநாள் என்னை அழைத்தவர் அந்தப் படத்திலும் யோகிபாபுவின் நாலு நண்பர்களில் ஒருவராக நடிக்கும்படி கூறினார்.
இந்த கதாபாத்திரம் கூட ஏற்கனவே முத்தையா தயாரித்த லிசா படத்தில் நடித்த மற்றொரு நடிகர் நடிக்கவேண்டிய கதாபாத்திரம் தான்.
ஆனால் அவர் திடீரென ஒதுங்கிக்கொள்ள எனக்கு அதிர்ஷ்டம் அடித்தது..
திடீரென ஒருநாள் வாட்ஸ்அப்பில் பிளைட் டிக்கெட் அனுப்பி கிளம்பி வரச் சொன்னார்.
ஏர்போர்ட் வருவதற்குள் படத்தின் முழு ஸ்க்ரிப்ட்டையும் எனக்கு ஈமெயிலில் அனுப்பி சென்னை வருவதற்குள் விமானத்திலேயே படித்துவிடுங்கள் என்றும் கூறிவிட்டார்.
அந்த நான்கு கதாபாத்திரங்களில் எனக்குப் பிடித்த கேரக்டரை என்னையே தேர்ந்தெடுத்துக்
கொள்ளச் சொன்னார்.
அப்படி நான் தேர்ந்தெடுத்தது தான் நான் நடித்த ஏஜெண்ட் கதாபாத்திரம்.
இதில் இன்னொரு ஸ்பெஷல் என்னவென்றால் அந்த கேரக்டரில் தானே நடிக்கலாம் என முத்தையா நினைத்திருந்தார்.
ஆனால் எனக்காக விட்டுக் கொடுத்துவிட்டார்.
காக்டெய்ல் படத்தில் நடிக்கும்போது யோகிபாபுவுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது.
யோகிபாபு தலைக்கனம் துளியும் இல்லாதவர். நீங்கள் நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு சப்போர்ட் பண்ணுவார்.
எனக்கே எல்லா வசனத்தையும் கொடுத்துட்டா இவங்க எப்படி வளருவாங்க..??
இவங்களுக்கும் கொடுங்க என பெருந்தன்மையாக சக நடிகர்களையும் வளர்த்தும் விடும் யோகிபாபுவின் குணம் என்னை ரொம்பவே ஆச்சர்யப்படுத்தியது.
அவரது இந்த நல்ல மனதுதான் அவரை இந்த உயரத்திற்கு கொண்டுவந்து வைத்துள்ளது என்றே சொல்லலாம்.
அடுத்ததாக சில நாட்களில் டேனி படம் Zee5இல் வெளியாக இருக்கிறது.
அந்தப்படம் இன்னும் ரசிகர்களிடம் என்னை நெருக்கமாகக் கொண்டு சேர்க்கும்.
சினிமாவுக்கான இத்தனை வருட போராட்டங்களில் பலவிதமான அனுபவங்களை என் வாழக்கையில் சந்தித்து விட்டேன்..
என் தந்தை என்னிடம் சொத்துக்கள் தரமாட்டேன் என பத்திரம் எழுதி வாங்கிக்கொண்டுதான் சினிமாவில் விட்டுவைத்திருக்கிறார்.
நானும் எழுதிக்கொடுத்துவிட்டேன்.
.. அந்த அளவுக்கு சினிமா என்பது என் மனதில் ஆழமாக இறங்கி விட்டது.
என் மனைவி என் முயற்சிகளுக்கு எப்போதுமே உறுதுணையாக இருந்து வருகிறார்..
சொன்னால் நம்பமாட்டீர்கள்.. இதுவரை நூறு ஆடிஷன்களுக்கு மேல் சென்றிருக்கிறேன்..
பாராட்டாகவோ ஆலோசனையாகவோ ஏதோ ஒரு அறிவுரையை சொல்வார்களே தவிர யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லை..
ஆனால் பிஜி முத்தையா எந்த ஆடிஷன் வைத்து என்னைத் தேர்ந்தெடுத்தார்..? இல்லையே…? ஸ்பாட்டிற்கு வரும் ஒரு நடிகனை தனக்கு வேண்டிய கதாபாத்திரமாக மாற்றிக்கொண்டார்..
அந்த தில் அவருக்கு இருக்கிறது.
புதிதாக வாய்ப்பு தேடிவந்த காலத்தில் நான் வசதியானவன் என்பதால் பல நண்பர்கள் தங்களது தேவைகளுக்காக என்னைப் பயன்படுத்திக் கொண்டார்கள்.
ஆனால் ஒருகட்டத்தில் சென்னையில் ஒருநாள் இரவு தங்க இடம் இல்லாமல் ரயில்வே பிளாட்ஃபார்மில் படுத்து கூட தூங்கும் சூழ்நிலையையும் சந்தித்தேன்..
இதெல்லாமே எனக்குக் கிடைத்த பாடங்கள் தான்.
இத்தனை வருட சினிமாவில் நான் உணர்ந்துகொண்ட விஷயம், வாய்ப்புக்காக நூறு இடங்களுக்கு மாற்றி மாற்றி அலையாதீர்கள்..
செலக்டிவாக இரண்டோ மூன்றோ நபர்களை மட்டும் விடாமல் பின் தொடருங்கள்..
உங்களுக்காக மெனக்கெட்டு அவர்கள் படத்தில் ஒரு கேரக்டரை உருவாக்கவில்லை என்றாலும், வேறு ஒருவர் கிடைக்காவிட்டால் அந்தசமயத்தில் தேடப்போன மூலிகை தெருவில் கிடைத்தது போல அவர்கள் மனதில் ஒரு ஆப்ஷனாக உங்களை நினைத்துப் பார்க்கும் அளவுக்கு அவர்களின் விசுவாதத்தை சம்பாதித்துக் கொள்ளுங்கள்…
இனி என் திரையுலகப் பயணத்தை என்னை நம்பிய பிஜி முத்தையா சற்குணம் போன்றவர்களுடன் இணைந்து தான் பயணிக்க இருக்கிறேன்..
வெளிவாய்ப்புகள் தேடிவரும்போது வரட்டும். இனியும் வாய்ப்பு தேடிச்சென்று ஏமாறும் எண்ணமும் இல்லை..
அந்த ஏமாற்றத்தை தாங்கக்கூடிய சக்தியும் இல்லை” என்கிறார் முத்தாய்ப்பாக.