தமிழ்த் திரையுலகின் முழுமையான முதல் டிஜிட்டல் திரைப்படமான “சிலந்தி” வெற்றிப் படத்தை இயக்கிய ஆதிராஜன், ரணதந்ரா(கன்னடம்), அருவா சண்ட படங்களைத் தொடர்ந்து கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் நான்காவது படம் “மாஸ்க்”. நோயாளிகளை பணம் காய்க்கும் மரமாகவே பார்க்கும் சில மனசாட்சியற்ற மருத்துவர்களால் ஏற்படும் விபரீத நிகழ்வுகளும் அதனால் உருவாகும் பாதிப்புகளையும், எதிர்விளைவுகளையும் பரபரப்பாக சொல்லும் கதைக்கு, நொடிக்கு நொடி பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இன்றைய நாகரீக சமுதாயத்தை சிந்திக்கத் தூண்டும் வகையில் அழுத்தமான கருத்துக்களையும் ஆவேசமாகப் பேசும் அதிரடி த்ரில்லர் படமாக உருவாகிறது “மாஸ்க்”.
கதாநாயகன் கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் வில்லனாக அறிமுகமாகிறார் விஜய்பாலாஜி. முக்கிய வேடங்களில் அருள்தாஸ், சம்பத்ராம், சேரன் ராஜ், ரஞ்சன், திரைப்பட தயாரிப்பாளர்கள் பி.எல்.தேனப்பன், டி. சிவா, ‘பெப்சி’ சிவா, வனராஜா, “மரகத நாணயம்” வீரா, பாரதி, அஜய் .எஸ் ஆகியோர்
நடிக்கின்றனர். காமெடியில் அதகளம் பண்ணும் பொறுப்பை இமான் அண்ணாச்சி, மதுமிதா, ‘விஜய் டிவி’ சரத் கூட்டணி ஏற்றிருக்கிறது.
இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த்தேவா இசையமைக்கிறார். கே.ராஜன் தயாரித்த “டபுள்ஸ்”படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஸ்ரீகாந்த் தேவா, விஜய்யின் சிவகாசி, அஜீத்தின் ஆழ்வார், விஜயகாந்தின் அரசாங்கம், சரத்குமாரின் ஏய், சிம்புவின் சாணக்யா ஜெயம்ரவியின் எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி உட்பட 100 படங்களுக்கு இசையமைத்து முடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 101வது படமாக “மாஸ்க்” படத்திற்கு இசையமைக்கிறார்.
ஏராளமான விளம்பர படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கும் எஸ். சக்திவேல் “மாஸ்க்”க்கு பல டிஜிட்டல் கேமராக்களால் ஒளியூட்டுகிறார். சேரனின் ‘ராஜாவுக்கு செக்’, குற்றம் கடிதல் உட்பட பல படங்களுக்கு படத்தொகுப்பை கையாண்ட பிரேம்குமார் இந்தப் படத்தின் எடிட்டிங்கை கவனிக்கிறார். 400 படங்களுக்கு நடனகாட்சிகளை வடிவமைத்த தினா இப்படத்திற்கும் நடனம் அமைக்கிறார். சினேகன், ஆதிராஜன் பாடல்களை எழுதுகின்றனர். சவுண்ட் எஃபெக்ட்ஸ்: சிவகுமார். மக்கள் தொடர்பு: ஏ.ஜான், டிசைன்ஸ்: சிந்துகிராபிக்ஸ் பவன்.
இந்த படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் தனது கிரீன் மேஜிக் கிரியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் இயக்குநர் ஆதிராஜன் தயாரிக்கிறார். படப்பிடிப்பு சென்னை, வேளாங்கண்ணி, பாண்டிச்சேரி, கோவா ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.