நண்பர் எஸ்.பி.பி.நலமுடன் திரும்பி வருவார்: எடிட்டர் மோகன்

எஸ். பி .பி யின் உடல் நலம் குறித்து பிரபல தயாரிப்பாளரும், டைரக்டர் மோகன்ராஜா, நடிகர் ஜெயம் ரவி அப்பாவுமான எடிட்டர் மோகன் கூறியுள்ளதாவது,

‘எஸ் .பி .பாலசுப்ரமணியமும் நானும் நீண்ட நாளைய நண்பர்கள்.அவருடைய இந்த நிலை என்னை மிகவும் வருந்தச் செய்துள்ளது.அவருக்கும் எங்களுக்குமான உறவு 1975 முதல் இன்றுவரை நிலைத்திருக்கிறது. எங்களது நட்பு குடும்ப உறவாக வளர்ந்திருக்கிறது.

என்னுடைய எல்லா மொழி மாற்றுப் படங்களுக்கும் என்னுடைய நேர்முகப் படங்களுக்கும் அவர் பாடல்கள் பாடியிருக்கிறார்.அவர் பாடல்கள் இல்லாத படங்களே கிடையாது. என்னுடைய மொழிமாற்றுப் படங்களுக்கு நாயகனுக்கு அவர்தான் வசனங்கள் பேசுவார் .எல்லா படங்களும் வெற்றி அடைந்துள்ளன. அதோடு என்னுடைய படங்களின் பூஜைகளை அவருடைய கோதண்டபாணி தியேட்டரில்தான் வைத்துக் கொள்வேன். அதில் எனக்கு ஒரு ஆனந்தம். நிச்சயமாக எனக்கு வெற்றி கிடைக்கும்.
இதுவரையில் அப்படி எல்லாப் படங்களும் எனக்கு வெற்றிபெற்றுள்ளன. அதோடு அவருடைய டெக்னீசியன்கள், அவருடன் வேலை செய்பவர்கள் அனைவரும் எனக்கு மிகவும் நெருங்கியவர்கள். இன்று அதையெல்லாம் நினைக்கும் பொழுது மனம் மிகுந்த வேதனை அடைகிறது .அதோடு என்னுடைய மகன் ஜெயம் ரவியை வைத்து அவர் ‘ மழை ‘என்ற படத்தைத் தயாரித்தார். அந்தப் படமும் வெற்றி பெற்றது.

இப்படி எங்களுக்குள் உறவுகள் நீண்டு கொண்டே போகிறது. இன்றும் நான் ஒவ்வொரு நாளும் அவருடைய மகனான சரணிடம் அவருடைய நிலையை அறிந்து கொண்டுதான் இருக்கிறேன். என் மனம் மிகவும் வருத்தத்தில் உள்ளது. நிச்சயமாக எனது நண்பர் எஸ். பி. பாலசுப்ரமணியம்  மீண்டும் வந்து நலமாக வந்து எங்களுடன் கைகோர்த்து வேலை செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது .அந்த நம்பிக்கையைக் கடவுள் கொடுப்பார் என்று நம்புகிறேன். நிச்சயமாக நம்புகிறேன்.’
இவ்வாறு எடிட்டர் மோகன் கூறியுள்ளார்.