தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் சமீபத்தில் நடித்த புஷ்பா திரைப்படம் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று நல்ல வசூலை ஈட்டியது. அல்லு அர்ஜுனிடம், முன்னணி புகையிலை நிறுவனம் அவர்களது விளம்பர படத்தில் நடிக்க அழைத்துள்ளனர். அந்த விளம்பர படத்திற்காக அல்லு அர்ஜுனுக்கு பல கோடி சம்பளம் வழங்க முடிவு செய்துள்ளனர். ஆனால் புகையிலை விளம்பரப் படத்தில் நடிக்க அல்லு அர்ஜுன் மறுத்துவிட்டார்.
இந்நிலையில் அல்லு அர்ஜுனின் இந்த செயலை பாராட்டி பாமக இளைஞரணி தலைவர் டாக்டர்.அன்புமணி ராமதாஸ் அவருடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பது, புகையிலை நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் நடிக்க பெருந்தொகையை ஊதியமாகத் தருவதாக ஆசை காட்டப்பட்ட போதிலும், சமூகக் கேடுகளை விளைவிக்கும் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்று நடிகர் அல்லு அர்ஜுன் மறுத்திருப்பது வரவேற்கத்தக்கது. புகையிலை நிறுவன விளம்பரங்களில் தாம் நடித்தால், அதன் மூலம் உந்தப்பட்டு தமது ரசிகர்கள் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகக் கூடும் என்பதால் அவர் இந்த முடிவை எடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவரது சமூக அக்கறை பாராட்டத்தக்கது.
நடிகர்கள் புகை பிடிக்கும் காட்சிகளில் நடித்தால், அதைப் பார்த்து ரசிகர்கள் புகையிலைக்கு அடிமையாவார்கள் என்பதால் தான் அத்தகைய காட்சிகளில் நடிப்பதை தவிர்க்கும்படி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது முன்னணி நடிகர்களுக்கு கடிதம் எழுதினேன். புகையிலை நிறுவன விளம்பரத்தில் நடிக்க மறுத்த நடிகர் அல்லு அர்ஜுன் திரைப்படங்களிலும் புகைக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும். அனைத்து நடிகர்களும் அவர்களின் ரசிகர்கள் உள்ளிட்ட மக்கள் நலன் கருதி புகைக்கும் காட்சிகளைத் தவிர்க்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.