தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் விவசாயத்தை மேம்படுத்தும் வகையிலும், மக்களின் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், கிடைக்கப்பெறும் நீரை வீணாக்காமல் நீர்நிலைகளில் தேக்கி வைக்கும் பொருட்டும், பல்வேறு பாசன மேம்பாட்டுத் திட்டங்களை புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், வேலுர் மாவட்டம், பேர்ணாம்பட்டு வட்டம், மசிகம் கிராமத்தின் அருகே மலட்டாற்றின் குறுக்கே 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக நிலத்தடி தடுப்புச்சுவர் அமைக்கும் பணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்கள். இந்த நிலத்தடி தடுப்புச்சுவர், சுமார் 150 மீட்டர் நீளத்தில், 10 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்படவுள்ளது. இந்த நிலத்தடி தடுப்புச்சுவர் அமைக்கும் பணி முடிவுற்று பயன்பாட்டிற்கு வரும்பொழுது சுமார் 377 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி உறுதி பெறுவதுடன், அருகில் உள்ள நீர்நிலைகளின் நீர் மட்டமும் உயரும்.
மேலும், ஆம்பூர், பேர்ணாம்பட்டு, மசிகம், கைலாசகிரி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களின் குடிநீர்த் தேவை பூர்த்தி செய்யப்படும். மேலும், விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் வட்டம், எடுத்தவாய்நத்தம் கிராமத்தின் அருகே முக்தா ஆற்றின் குறுக்கே 1 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயற்கை முறையில் நிலத்தடி நீர்ச்செறிவூட்டும் கட்டுமானப் பணிக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அடிக்கல் நாட்டினார்கள். இந்த நிலத்தடி நீர்ச்செறிவூட்டும் கட்டுமானப் பணி முடிவுற்று பயன்பாட்டிற்கு வரும்பொழுது, சுமார் 124.375 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி உறுதி பெறுவதுடன், அருகில் உள்ள நீர்நிலைகளின் நீர் மட்டமும் உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.