46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி மார்ச் 2-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை நடைபெற்றது. சென்னை ரைஃபிள் கிளப்பின் செயலாளர் ராஜசேகர் பாண்டியன் இந்தப் போட்டிகளை நடத்தினார். தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்து சுமார் 900-க்கும் மேற்பட்டோர் இந்தப் போட்டியில் பங்கேற்றார்கள். 60-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் பல்வேறு துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் நடைபெற்றன. சென்னை ரைஃபிள் கிளப், மதுரை ரைஃபிள் கிளப், கோயம்புத்தூர் ரைஃபிள் கிளப் உட்பட 52 கிளப்கள் இந்தப் போட்டிகளில் பங்கெடுத்தன.
இதில் சென்னை ரைஃபிள் கிளப் அணி பல்வேறு பதக்கங்களைக் குவித்தது. சென்னை ரைஃபிள் கிளப்பின் உறுப்பினரான நடிகர் அஜித் அவர்கள் 6 பதக்கங்களை வென்றார். அவருக்கு கிளப்பின் இதர உறுப்பினர்கள் தங்களுடையப் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
துப்பாக்கி சுடுதல் போட்டியில் நடிகர் அஜித் அவர்கள் வென்றுள்ள பதக்கங்களின் விவரம்:
* ஏர் பிஸ்டல் 10 மீ – தங்கம்
* சென்டர் ஃபயர் பிஸ்டல் (ஐ.எஸ்.எஸ்.எஃப்) (25 மீ) – வெள்ளி
* சென்டர் ஃபயர் பிஸ்டல் (என்.ஆர்) – (25 மீ) – தங்கம்
* ஸ்டாண்டர்ட் பிஸ்டல் (ஐ.எஸ்.எஸ்.எஃப்) – (25 மீ) – தங்கம்
* ஸ்டாண்டர்ட் பிஸ்டல் (என்.ஆர்) – (25 மீ) – வெள்ளி
* ஃப்ரீ பிஸ்டல் (50 மீ) – தங்கம்
சென்னை ரைஃபிள் கிளப்பின் செயலாளர் ராஜசேகர் பாண்டியன், தேசிய ரைஃபிள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் டிவிஎஸ் ராவ், தமிழ்செல்வன் டிஜிபி, தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பின் செயலாளர் ரவிகிருஷ்ணன், சென்னை ரைஃபிள் கிளப்பின் இணைச் செயலாளர் கோபிநாத் ஆகியோர் போட்டியில் வென்றவர்களுக்குப் பதக்கங்களை வழங்கினார்கள். மேலும் மதுரை ரைஃபிள் கிளப் செயலாளர் வேல் சங்கர், கோயம்புத்தூர் ரைஃபிள் கிளப் செயலாளர் மருதாச்சலாம் உள்ளிட்ட பலர் இந்தப் போட்டியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டார்கள்.