சொத்துகள் வாங்க இது சரியான தருணம் – கிரடாய் அறிவிப்பு
சென்னை, ஜூலை 13–கொரோனா தொற்று பரவலுக்கு பிந்தைய நிலையில் வணிக மற்றும் குடியிருப்பு சொத்துகள் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தற்போது சென்னையில் ரியல் எஸ்டேட் துறை நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது. எனவே சொத்துகள் வாங்க இது சரியான தருணம் என்று கிரடாய் அறிவித்துள்ளது. கடந்த காலத்தில் பெரும் பின்னடைவைச் சந்தித்த இந்த துறை தற்போது நல்ல வளர்ச்சி கண்டு வருவது என்பது மிகுந்த ஊக்கத்தை அளிக்கிறது. எனவே, இப்போது வணிக கட்டிடங்கள், வீடுகள், பிளாட்டுகள் வாங்குபவர்களுக்கு இது சரியான காலக்கட்டமாகும் என்று கிரடாய் சென்னை பிரிவு தலைவர் சிவகுருநாதன் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், தற்போது வீடுகள் அல்லது பிளாட்கள் வாங்குவதற்கு இது சரியான தருணம் ஆகும். இன்று கட்டுமான நிறுவனங்கள் விளம்பரம் செய்யும் குறைந்த விலையை இனி வரும் காலங்களில் எதிர்பார்க்க முடியாது.
மொத்த கட்டுமான செலவில் ஸ்டீல், மணல், சிமெண்ட் மற்றும் தண்ணீர் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் செலவானது 65 சதவீதம் வரை ஆகிறது. இது கட்டுமான நிறுவனங்களுக்கு மிகுந்த கவலை அளிக்கும் ஒன்றாக உள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும், எஃகு விலை ஒரு டன்னுக்கு 65 சதவீதம் வரை உயர்ந்துள்ளது, அதே சமயம் செங்கல் விலை 200 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வுடன் வட்டி விகிதமும் அதிகரித்து உள்ளது. இதற்கு முன் 6 சதவீத வட்டியில் வீட்டு கடன்களை வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் வீட்டு கடன் வழங்கும் நிறுவனங்கள் வழங்கி வந்தன. அது தற்போது 8 சதவீதமாக உயர்ந்து உள்ளது. ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தும்போது இந்த வட்டி விகிதம் மேலும் உயரும் வாய்ப்பு உள்ளது.
இவற்றுடன் குறைந்த அளவிலேயே கட்டப்பட்டு வரும் புதிய கட்டுமானங்கள் ஆகியவற்றின் காரணமாக வரும் காலங்களில் இதன் விலை உயர வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) ஒற்றைச் சாளர முறையை அமல்படுத்தி இருப்பது குறித்து நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இது எங்களின் நீண்ட கால கோரிக்கை ஆகும். எந்தவொரு புதிய முயற்சியின்போது பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவது வழக்கம். அவ்வாறு ஏற்படும் சிறு சிறு பிரச்சினைகளை நாங்கள் சிஎம்டிஏவிடம் எடுத்துக் கூறி வருகிறோம். தற்போது இந்த புதிய முறை அதிக உயரமில்லாத கட்டிடங்கள் மற்றும் உயரமான கட்டிடங்கள் தொடர்பான கோப்புகளை கையாண்டு வருகிறது. இதைத் தொடர்ந்து இது லே–அவுட் மேம்பாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
கிரடாய் சென்னை பிரிவு புதிய குழுவில் தேர்வு செய்யப்பட்ட தலைவராக முகமது அலி, துணைத் தலைவர்களாக மெஹுல் தோஷி, அபிஷேக் மேத்தா, செயலாளராக க்ருதிவாஸ், பொருளாளராக முகமது அஸ்லாம் பக்கீர், செயல் உறுப்பினர்களாக அருண், ரஞ்சித் ரத்தோட், விஷ்வஜித் குமார், ராம்குமார், மற்றும் சுமன் வூரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் எளிதான வணிகம் மேற்கொள்வது, திறன் மேம்பாடு, நுகர்வோர் குறைகள் மற்றும் தீர்வு மன்றம் மற்றும் பெருநிறுவன சமூகப் பொறுப்புகள் உள்ளிட்ட துறைகளில் கவனம் செலுத்துவார்கள்