காலா படத்துக்கு தடைகோரிய வழக்கு

காலா படத்துக்கு எதிராக விளம்பர நோக்குடன் தொடரப்பட்ட வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என நடிகர் தனுஷின் தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது. தனது கதையை திருடி கரிகாலன் என்ற அடைமொழியுடன் ‘காலா’ திரைப்படத்தை எடுப்பதாகவும், அதனை வெளியிடவும் தடை விதிக்க கோரியும் சென்னையை சேர்ந்த ராஜசேகர் என்பவர் சென்னை உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த நடிகர் தனுஷின் தயாரிப்பு நிறுவனம், படக்கதை திருடியதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டை மறுத்ததோடு, மனுதாரரின் படப் பெயர் கரிகாலன் என்றும், தாங்கள் காலா என்றே படத்தலைப்பையே வைத்துள்ளதாகவும் கூறியுள்ளது. மனுதாரர் தலைப்பை பதிவு செய்த ஓர் ஆண்டுக்குள்ளாக படத்தை எடுக்கவில்லை என்றும், 2006ஆம் ஆண்டுக்கு பின் அந்த தலைப்பை அவர் புதுப்பிக்கவில்லை என்றும் தனுஷ் நிறுவனம் சுட்டிக்காட்டியது. இதனை விசாரித்த நீதிபதி வழக்கின் விசாரணையை வரும் 26 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.