கர்நாடகத்தைச் சேர்ந்த மருத்துவர் ராவ் இரண்டு தினங்களுக்கு முன் கொச்சி-மும்பை தேசிய நெடுஞ்சாலையில் காரில் பயணம் செய்திருக்கிறார். இரவு 10.30 மணியளவில் உடுப்பி அருகேயுள்ள குண்ட்மி டோல்கேட்டில் சுங்கக்கட்டணம் செலுத்துவதற்காக காரை நிறுத்தி தனது கார்டை கொடுத்துள்ளார். ராவின் கார்டை வாங்கிய சுங்கச்சாவடி உதவியாளர் 40 ரூபாய்க்கு ஸ்வைப் செய்துள்ளார். ஆனால் ராவின் மொபைலில் 4 லட்ச ரூபாய்க்கு ஸ்வைப் செய்ததாக குறுந்தகவல் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ராவ் இதுகுறித்து சுங்கச்சாவடி உதவியாளரிடம் கேட்க அவர் தனது தவறை ஒப்புக் கொள்ளவில்லை.
சுங்க நிர்வாகிகளிடம் 2 மணி நேரம் பேசியும் எந்த பயனுமில்லை. இதனால் வேறு வழியின்றி அருகிலிருந்த காவல் நிலையத்திற்கு சென்று ராவ் புகார் அளித்தார். ராவின் புகாரைத் தொடர்ந்து நள்ளிரவு 1 மணியளவில் தலைமைக்காவலர் ஒருவர் ராவுடன் வந்து சுங்கச்சாவடி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனைத் தொடர்ந்து மருத்துவர் ராவின் 3,99,960 ரூபாய் பணத்தை சுங்க நிர்வாகிகள் அதிகாலை 4 மணியளவில் அவரிடம் திரும்ப ஒப்படைத்தனர். இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.