மொகடிஷு நகரின் மத்திய பகுதியில் பாராளுமன்ற கட்டிடத்தின் அருகே உள்ள டபாகா சந்திப்பில் பரபரப்பான வீதியில் வெஹிலியே என்ற ஓட்டல் ஒன்றுள்ளது. பெரும்பாலும் அந்நாட்டின் உயரதிகாரிகள் இந்த ஓட்டலின் நிரந்தர வாடிக்கையாளர்களாக உள்ளனர். இந்த ஓட்டலின் அருகே (உள்ளூர் நேரப்படி) இன்று காலை 11 மணியளவில் வேகமாக வந்த ஒருகார் திடீரென்று வெடித்து சிதறியதில் அங்கு இருந்த ஆறுபேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த பலர் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருசிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வழக்கமாக, இதுபோன்ற தீவிரவாத தாக்குதல்களை இங்குள்ள அல் ஷபாப் தீவிரவாதிகள் நடத்தி வருவதால் இந்த கார் குண்டு தாக்குதலும் அவர்கள் கைவரிசையாகதான் இருக்கும் என பாதுகாப்புத்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.