திரைப்பட துறையினரின் வேண்டுகோளை ஏற்று, கேளிக்கை வரி விதிப்பில் இருந்து திரைத்துரைக்கு விலக்கு அளிக்க கேரள நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பு முறைப்படி நாடு முழுக்க திரைப்படத்துறைக்கு 28% வரி விதிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகம் இந்த வரி விதிப்பால் பெரிதும் பாதிக்கப்படும் என நடிகர் கமல்ஹாசன் குரல் எழுப்பியிருந்தார். வரியை குறைக்காவிட்டால் சினிமாவை விட்டு வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை என கமல் தெரிவித்திருந்த கருத்து ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இதனிடையே தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமாரும், இதே கோரிக்கையாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியிடம் முன் வைத்திருந்தார். ஆனால் பதில் வரவில்லை. இந்த நிலையில், கேரள அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. கேரளாவில் சினிமாத்துறை என்பது 500 கோடி அளவுக்கான வணிகம். நேரடியாகவும், மறைமுகமாகவும், 50,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. ஒரு திரைப்படத்திற்கான செலவு சராசரி ரூ.4 கோடி என்ற அளவில் உள்ளது. ஆண்டுக்கு சுமார் 130 படங்கள் அங்கு ரிலீசாகின்றன.
கேரள அரசு 25 சதவீதத்தை கேளிக்கை வரியாக விதித்திருந்தது. இந்த நிலையில் ஜிஎஸ்டி 28 சதவீத வரி விதித்ததால் திரைத்துறைக்கு பாதிப்பு என கருதி இந்த முடிவை எடுத்துள்ளது கேரள நிதி அமைச்சகம். முன்னதாக, பினராயி விஜயன் தலைமையிலான கேரள இடதுசாரி அரசு ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து கடிதம் அனுப்பியிருந்தார்.