‘முத்தலாக்’குக்கு பெண் மறுப்பு தெரிவிக்க முடியுமா? என சுப்ரீம் கோர்ட் கேள்வி

இஸ்லாமிய சமுதாயத்தில் 3 முறை தலாக் கூறி விவாகரத்து பெறும் முறைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. மேலும் பலதார திருமணத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளையும் அதனுடன் இணைத்து சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் இஸ்லாமிய தனி நபர் சட்ட வாரியத்தின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் மத விவகாரங்களில் கோர்ட்டுகள் தலையிடக் கூடாது என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால் முத்தலாக் முறைக்கு எதிராக மத்திய அரசு கருத்து தெரிவித்தது.

முத்தலாக் மற்றும் பலதார மணம் போன்றவை அரசியல் சட்ட ரீதியாக அனுமதிக்கப்படக் கூடியதா? என்பதை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முடிவு செய்யும் என்றும் மே 11ஆம் தேதி முதல் வழக்கு விசாரணை நடைபெறும் என்றும் தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் தலைமையிலான அமர்வு அறிவித்தது. இன்று இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது முத்தலாக்குக்கு எதிராக ஒரு பெண் மறுப்பு தெரிவிக்க முடியுமா? என்பது குறித்து அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் பதில் அளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.