கர்நாடக மாநிலத்தின் கடற்கரையோர மாவட்டங்களில் ‘கம்பளா’ என்ற பெயரில் எருமை பந்தயங்கள் நடத்தப்பட்டு வந்தன. சேற்றில் எருமை மாடுகளை ஓடவிட்டு பந்தயம் நடத்துவர். இது கர்நாடக மக்களின் பாரம்பரிய போட்டியாகும். இந்த போட்டிக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு நவம்பர் 18-ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக இந்த போட்டி கர்நாடகாவில் நடத்தப்படவில்லை. அந்த தடையை நீக்கக் கோரி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ‘கம்பளா’ போட்டி நடத்தும் விழா குழுவினரான ‘தட்சிணா கன்னட ‘கம்பளா கமிட்டி’ கர்நாடக ஐகோர்ட்டில் மனு செய்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருப்பதாவது, கம்பளா விளையாட்டைப் பற்றி முழுமையாக ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்க வேண்டும். அதுவரை கம்பளா விளையாட்டை நடத்த அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறி இருந்தனர். ஆனால் பீட்டா அமைப்பு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை காரணம் காட்டி அந்த மனுவை தள்ளுபடி செய்யுமாறு கோரிக்கை விடுத்தது. இதனால் அந்த மனு மீதான விசாரணையை வருகிற 30-ஆம் தேதிக்கு கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.கே. முகர்ஜீ, நீதிபதி சோமசேகர் ஆகியோர் தள்ளி வைத்தனர். 30-ஆம் தேதி விசாரணைக்கு வந்த பிறகு தான் ‘கம்பளா’ போட்டிக்கு தடை நீங்குமா? என்பது தெரியவரும். இந்த நிலையில் தமிழக மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தி ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் கொண்டு வரக் காரணமாக அமைந்து விட்டனர். தமிழர்கள் மத்தியில் எழுந்த உணர்ச்சி போராட்டம் உலகம் முழுவதும் எதிரொலித்தது. ஜல்லிக்கட்டு தடையை நீக்கும் நிரந்தர சட்டம் கொண்டுவர காரணமாக அமைந்துவிட்டது. அதேபோல கர்நாடக மக்கள் ‘கம்பளா’ போட்டியை நடத்த வலியுறுத்தி களத்தில் இறங்கி போராடத் தயாராகி வருகிறார்கள். இந்த ‘கம்பளா’ போட்டியை நடத்தும் ‘கம்பளா’ சமூகத்தினரும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடம் போட்டியை நடத்த போராட்டம் நடத்த வாருங்கள் என்று ஆதரவு திரட்டி வருகிறார்கள். மேலும் ‘கம்பளா’ போட்டியை நடத்த தேவையான நடவடிக்கைளை கர்நாடக அரசு எடுக்கவேண்டும் என்று தட்சிணா கன்னடா கம்பளா கமிட்டி தலைவர் அசோக்குமார்ராய் வேண்டு கோள் விடுத்துள்ளார். மங்களூரை ஆண்ட அலுப்பா மன்னர்கள் காலத்தில் இருந்தே ‘கம்பளா போட்டி’ நடத்தப்பட்டு வருகிறது. தட்சிணா கன்னடா, உடுப்பி ஆகிய மாவட்டங்களில் ‘கம்பளா எருது பந்தயம்’ மிகவும் பிரபலமானது. இந்த போட்டிகளில் 140 ஜோடி எருதுகள் கலந்து கொள்ளும். போட்டிகள் நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை நடத்தப்படும். பல்வேறு பகுதிகளில் மொத்தம் 45 போட்டிகள் நடத்தப்படும். இந்த போட்டியில் பங்கேற்கும் எருதுகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். சிறந்த உணவுகளும் அளிக்கப்படும். எருதுகளுக்காக தனி நீச்சல் குளம் மற்றும் சேறு உள்ள மைதானம் போன்ற பகுதி உருவாக்கப்படும். இந்த போட்டிக்காக சேறும், சகதியுமான நிலத்தில் 160 மீட்டர் நீளமும், 12 மீட்டர் அகலமும் கொண்டபாதை அமைக்கப்பட்டு அதில் எருதுகளை ஓட விடுவார்கள். இந்த பாதையில் 2 பிரிவுகளாக பிரித்து எருதுகளை ஓடவிடுவார்கள். சில பகுதிகளில் ஒரே பாதை யில் இரண்டு ஜோடி எருதுகளை ஓடவிடுவது உண்டு. இந்த போட்டியில் ‘ஹட்ட அலகே’ ‘கென அலகே’ என்ற 2 பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.