மூளைச்சாவு அடைந்த ஒரு வாலிபரின் இதயம் மற்றும் நுரையீரல் தானம் செய்யப்பட்டது

உடல் உறுப்பு தானம் செய்வதன் மூலம் இறந்த பின்னும் மற்றொருவர் உடலில் நாம் உயிர் வாழ முடியும். மேலும் இறந்தும் இன்னொருவருக்கு வாழ்வு கொடுக்க முடியும் என்பதால் உடல் உறுப்பு தானம் செய்ய வேண்டியதின் அவசியம் பற்றி தற்போது வலியுறுத்தப்படுகிறது. இதன்மூலம் விழிப்புணர்வு ஏற்பட்டு பலரும் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வரும் நிலை ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலம் கொச்சியில் விபத்தில் மூளை சாவு அடைந்த ஒரு வாலிபர் தனது இதயம், நுரையீரல் தானம் மூலம் ஒரு இளம்பெண்ணிற்கு மறு வாழ்வு கொடுத்துள்ளார். அவரது பெயர் நிதின் (வயது 26).  மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்தில் சிக்கிய நிதின் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் கொச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் அவர் மூளை சாவு அடைந்தார். இதனால் அவர் இனி உயிர் பிழைப்பது கடினம் என்பதால் இதை அவரது பெற்றோரிடம் டாக்டர்கள் கூறினார்கள். மகனின் இந்த நிலை குறித்து மிகவும் கவலையடைந்த பெற்றோர் டாக்டர்களின் அறிவுரைப்படி நிதினின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி அவரது இதயம் மற்றும் நுரையீரல் கொச்சி தனியார் ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜெனிஷா (24) என்ற இளம்பெண்ணுக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது. இதைதொடர்ந்து டாக்டர்கள் நிதினின் இதயம் மற்றும் நுரையீரலை அகற்றி அதை பாதுகாப்பாக ஆம்புலன்ஸ் மூலம் 10 நிமிடத்தில் ஜெனிஷா சிகிச்சை பெற்ற ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதற்கு போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சரிசெய்து மிகவும் உதவியாக இருந்தனர். அங்கு 12 மணி நேரம் ஆபரே‌ஷன் நடத்தி ஜெனிஷாவுக்கு வெற்றிகரமாக மாற்று இதயம் மற்றும் நுரையீரல் பொருத்தப்பட்டது. தற்போது அவர் நலமாக உள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். நிதினின் இதயம் மற்றும் நுரையீரல் மூலம் மறுபிறவி எடுத்துள்ள ஜெனிஷாவின் குடும்பத்தினர் இதற்காக நிதினின் பெற்றோருக்கு கண்ணீர்மல்க தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.