அரசின் அனுமதிக்குப் பின் தீபாவளியன்று ஆர்.கண்ணன் தயாரித்து இயக்க, சந்தானம் நடிப்பில் வெளியான படம் ‘பிஸ்கோத்’. இப்படத்தை திரையரங்கில் வெளியிட்டது பற்றி இயக்குநர் ஆர்.கண்ணனும், நடிகர் சந்தானமும் பேசியதாவது:
இயக்குநர் ஆர்.கண்ணன் பேசும்போது,
கொரோனாவால் சினிமாவுக்கு மட்டும் தான் 100% நஷ்டம். ஏனென்றால், கோடை கொண்டாட்டமாக ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருந்தோம். ஆனால், மார்ச் 16ஆம் தேதியே ஊரடங்கை அறிவித்து விட்டார்கள். ஒரு படத்தை எடுத்துவிட்டு 8 மாதங்களாக வெளியிட முடியாமல் இருந்தால் எந்தளவு வலியும் வேதனையும் இருக்கும் என்று எங்களுக்கு தான் தெரியும்.
ஊரடங்கு தளர்வை அரசாங்கம் அறிவித்ததும் இப்படத்தை ஓடிடி-யில் வெளியிடலாமா? அல்லது திரையரங்கில் வெளியிடலாமா? என்று ஆலோசித்தோம்.
திரையரங்கில் வெளியிட்டால் ரசிகர்கள் வருவார்களா மாட்டார்களா? என்ற சந்தேகத்துடனும் தெரியத்துடனும் வெளியிட முடிவு செய்தோம்.
சந்தானம் இல்லையென்றால் இந்த படம் வெளியாக வாய்ப்பே இல்லை. இன்னும் 2 மணி நேரம் தான் இருக்கிறது. ரூ.50 லட்சம் இருந்தால் தான் இப்படத்தை வெளியிட முடியும். ஏதாவது உதவி செய்யுங்கள் என்று சந்தானம் வீட்டிற்கு சென்று கேட்டேன். அவர் உடனே கொடுத்தார். தமிழகம் முழுவதும் 600 திரையரங்குகளில் வெளியிட்டுள்ளோம். இதற்கு காரணம் சந்தானம், ரவி ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தார், தேனப்பன் என்று பலரும் உழைத்திருக்கிறார்கள்.
இப்படத்தில் நடித்த ‘சௌகார்’ ஜானகி தற்போது பெங்களூருவில் இருக்கிறார். அனைவருக்கும் வாழ்த்துக்கள் கூறியிருக்கிறார். அவருக்கு இது 400வது படம்.
இப்படத்தில் நடித்த மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் சொந்த ஊரில் இருப்பதால் அவர்களை அழைக்க முடியவில்லை.
இந்த கொரோனாவால் 9 மாதங்களுக்கானவட்டி மட்டுமே 3 கோடி வந்துவிட்டது. பைனான்சியர் ராம் பிரசாத் அடுத்த படத்தில் கொடுத்தால் போதும் என்று கூறிவிட்டார். வட்டியைக் குறைக்க வேண்டாம், இதுபோன்ற உதவியை செய்தாலே போதும்.
இவ்வாறு இயக்குநர் ஆர். கண்ணன் பேசினார்.
நடிகர் சந்தானம் பேசும்போது,
இப்படத்தை முதலில் ஓடிடி-ல் தான் வெளியிட முடிவு செய்தோம். ஆனால், இயக்குநர் ஆர்.கண்ணன் சிறிது காலம் காத்திருக்கலாம். திரையரங்கிலேயே வெளியிடலாம் என்று கூறினார். அவர் தான் இப்படத்திற்கு தயாரித்தும் இருக்கிறார்.
தீபாவளியன்று வெளியானதும் ரசிகர்களைக் காண திரையரங்கிற்கு சென்றேன். அங்கு வந்தவர்கள் அனைவரும் எனது ரசிகர்கள் தான். அவர்களுக்கு கைகூப்பி எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து திரையரங்குகளிலும் மக்கள் கூட்டம் இருக்கிறது.
எங்களை ரசிக்கிறார்கள், கொண்டாடுகிறார்கள் இவையெல்லாம் திரையரங்கில் தான் கிடைக்கும், ஓடிடி-யில் கிடைக்காது.
கொரோனா முழுவதும் குறைந்தாலும் சமூக இடைவெளியைப் பின்பற்றுவதை வழக்கமாக்கிக் கொண்டால் வருங்கால சந்ததிகளுக்கு நோய்த் தொற்று ஏற்படலாம் இருக்கும்.
ரசிகர்கள் பாதுகாப்பு நடவடிக்கையைப் பின்பற்றி 2 வாரங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லையென்றால், ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த அரசாங்கத்திடம் கோரிக்கை வைப்போம்.
மேலும், சரியான படம் எடுக்கவில்லையென்றால், இயக்குநரோ, நடிகரோ யாராக இருந்தாலும் தொலைந்து விடுவார்கள். அதேபோல், படத்தின் வெற்றியைப் பொறுத்து சம்பளம் வேறுபடும். அதற்கேற்ப நடிகர்களும் அனுசரித்து தான் போவார்கள். யாரும் நான் நடித்து விட்டேன், என் சம்பளம் வந்தால் போதும் என்று இருக்க மாட்டார்கள்.
அரசியலுக்கு வர மாட்டேன். பாஜகவில் இணையப் போவதாக வந்த செய்தி தவறானது.
இவ்வாறு நடிகர் சந்தானம் பேசினார்.