இயக்குனர் இமயம் பாரதிராஜா “நாங்கள் கலைஞர்கள்.. எங்களுக்கு எல்லா முகமும் உண்டு.. என் ஆளோட செருப்ப காணோம் என்கிற படத்தை எடுத்தவன்தான் மிகமிக அவசரம் என்கிற இந்த சமூக அக்கறையுள்ள படத்தின் கதையையும் எழுதி இருக்கிறான்.. இந்த படம் பார்க்கும் வரை சுரேஷ் காமாட்சியை ஒரு சாதாரண தயாரிப்பாளர் என்கிற அளவிலேயே அறிந்திருந்தேன்.. ஆனால் இந்தப் படம் பார்த்துவிட்டு நிஜமாக நீதான் இந்த படத்தை இயக்கினாயா என்று கேட்டேன்.. அப்புறம் தான் தெரிந்தது சுரேஷ் காமாட்சி ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்தவர் என்பது.
எல்லா மேடைகளிலும் சுரேஷ் காமாட்சி பிரச்சனைகளை பேசுகிறான் என்கிறார்கள்.. பிரச்சனைகளை கிளப்பாதவன் மனிதனே இல்லை.. குற்றம் கண்ட இடத்தில் விரலை நீட்ட வேண்டும். சுரேஷ் காமாட்சி சரியாக இருப்பதால் தான் அப்படி பேசுகிறான்.. அதனால்தான் சமூக பொறுப்புடன் இப்படி ஒரு படம் எடுத்துள்ளான்.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பெண் காவலர்களை பார்க்கும்போது இப்படி வெயிலில் காய்ந்து வாடுகிறார்கலே என நினைக்கும்போது கொடுமையாக இருக்கும். நான் சொல்ல நினைத்த ஒரு விஷயத்தை சுரேஷ் காமாட்சி சொல்லிவிட்டார். வசனங்கள் இல்லாமல் உடல் மொழியாலும் முகபாவத்தாலும் மிக அற்புதமான நடிப்பை கொடுத்து இந்த படத்தை தாங்கி பிடித்து இருக்கிறார் நாயகி ஸ்ரீ பிரியங்கா.. வழக்கு எண் முத்துராமனும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில், எழுந்துபோய் அடிக்கத் தோன்றும் விதத்தில் மிக தத்ரூபமாக நடித்துள்ளார்.
சமீபத்தில் திருப்பூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருந்தேன் அதில் கலந்துகொள்ள வந்த வெளிமாநிலத்தவர் பலர் என்னிடம் பேசியபோது, நாங்கள் திருப்பூர், கோவை என பல இடங்களில் மிகப்பெரிய அளவில் தொழில்துறையில் முதலீடு முதலீடு செய்துள்ளோம். அதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கும் 30% இடங்கள் வேண்டுமென குரல் கொடுக்கிறோம் என என்னிடம் கூறினார்கள்.. அப்போது வந்ததே பாருங்கள் எனக்கு ஒரு கோபம்.. இந்த தீ இன்னும் அணையவில்லை.. இங்கே முன்பு பல பட்டறைகள் போட்டிருந்தார்கள்.. அதில் பலபேர் கிளம்பிவிட்டார்கள் இன்னும் சில பட்டறைகள் மட்டும் மிச்சம் இருக்கின்றன..
தென்னிந்திய பிலிம் சேம்பர் என்பதையும் தென்னிந்திய நடிகர் சங்கம் என்பதையும் தமிழ்நாடு பிலிம் சேம்பர், தமிழ் நடிகர் சங்கம் என பெயரை மாற்ற 25 வருடங்களாக போராடி வருகிறோம் இன்னும் அதை நிறைவேற்ற முடியாத நிலையில்தான் நாம் இருக்கிறோம்” என்று கூறினார் பாரதிராஜா