பன்வாரி லால் ப்ரோஹித் ஆளுநராக பதவி ஏற்றார்

தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரி லால் ப்ரோஹித் இன்று பதவி ஏற்றார். கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், பன்வாரி லாலுக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார். பன்வாரி லால் தமிழகத்தின் 20-வது ஆளுநராவர். பதவி ஏற்பு விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், அரசுத் துறை செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், திமுக எம்.பி ஆர்.எஸ்.பாரதி, பாஜக எம்.பி இல.கணேசன், சிங்கப்பூர் மற்றும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

புதிய ஆளுநருக்கு முதல்வர் மற்றும் தலைமைச் செயலர் ஆகியோர் பூங்கொத்துக் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து மற்ற அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் ஆகியோரும் பூங்கொத்து கொடுத்தும் பொன்னாடை போர்த்தியும் வாழ்த்து தெரிவித்தனர்.  இதைத் தொடர்ந்து பேசிய ஆளுநர், “தமிழகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன்” என்றார். தமிழக அரசியலில் பல்வேறு சர்ச்சைக்குரிய விவகாரங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் புதிய ஆளுநரின் வரவானது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. புதிய ஆளுநரின் நடவடிக்கைகள் தமிழக அரசியலில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.