இந்திய கைப்பந்து சம்மேளனம், பாண்டிச்சேரி கைப்பந்து சங்கம் அனுமதியுடன் நெடுங்காடு ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் அர்ஜுனா ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 17-வது தேசிய ‘பீச்‘ வாலிபால் போட்டி காரைக்காலில் நடத்தப்படுகிறது. இந்தப்போட்டி நாளை (17ஆம் தேதி) முதல் 19ஆம் தேதி வரை அங்குள்ள கடற்கரையில் 3 ஆடுகளத்தில் நடக்கிறது. ஒ.என்.ஜி.சி. மற்றும் புதுச்சேரி பவர் கார்ப்பரேசன் லிமிடட் ஆதரவுடன் நடந்த இந்தப் போட்டியில் ஆண்கள் பிரிவில் 17 மாநிலங்களில் இருந்து 32 அணிகளும், பெண்கள் பிரிவில் 11 மாநிலங்களில் இருந்து 20 அணிகளும் ஆக மொத்தம் 52 அணிகள் பங்கேற்கின்றன. லீக் மற்றும் நாக்அவுட் முறையில் மின்னொளியில் போட்டி நடைபெறும் இந்த போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.75 ஆயிரமாகும்.
ஆண்கள் பிரிவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு முறையே ரூ.20 ஆயிரம், ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரமும், பெண்கள் பிரிவில் ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரமும் வழங்கப்படும். மேற்கண்ட தகவலை இந்திய கைப்பந்து சம்மேளன இணை செயலாளர் என்.நடராஜன், போட்டி அமைப்பு குழு செயலாளர் எஸ்.ராஜசேகர் ஆகியோர் தெரிவித்தனர். தேசிய பீச் வாலிபால் போட்டியில் தமிழகத்தில் இருந்து 2 ஆண்கள் அணியும், 2 பெண்கள் அணியும் பங்கேற்கிறது. ஆண்கள் பிரிவில் விக்ரம்- விவேக்ராஜ், இம்மானுவேல்-சுதாகர் ஜோடியும், பெண்கள் பிரிவில் ஜெனீபர்- யோகேஸ்வரி, பானுப்பிரியா-ரெவேக்கா ஜோடியும் கலந்து கொள்கிறது.