புதிய மைல் கல்லை இந்தி வசூலில் தொட்ட பாகுபலி-2

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவான ‘பாகுபலி-2’ கடந்த ஏப்.28ஆம் தேதி உலகமெங்கும் சுமார் 6000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளிலும் வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்கள் பலத்த வரவேற்பு கொடுத்துள்ளனர்.  பாகுபலி-2 வெளியாகி 3 நாட்கள் ஆகிய நிலையிலும் திரையிட்ட அனைத்து திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாகவே ஓடிக்கொண்டிருக்கிறது.

இதனால், வசூலிலும் இப்படம் மிகப்பெரிய சாதனைகளை படைத்து வருகிறது. இப்படத்தின் வசூல் ரூ.1000 கோடியை எட்டும் என்று புதிய கணக்கு ஒன்று சினிமா வட்டாரத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்தியில் இப்படம் வசூலில் பல்வேறு ஜாம்பவான்களின் படங்களையெல்லாம் முறியடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதாவது, இந்தியில் ‘பாகுபலி-2’ படம் திரையிட்ட மூன்றே நாட்களில் ரூ.125 கோடிக்கும் அதிகமான வசூலை எட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே அமீர்கான் நடிப்பில் இந்தியில் வெளிவந்த ‘தங்கல்’ படம்தான் அதிக வசூலை பெற்றிருந்ததாக வரலாறு இருந்தது.

அதாவது அப்படம் மூன்றே நாட்களில் ரூ.107 கோடியை வசூலித்தது. அதற்கடுத்தப்படியாக சல்மான்கான் நடிப்பில் வெளிவந்த ‘சுல்தான்’ படம் ரூ.105.5 கோடி வசூலித்தது.  தற்போது இந்த சாதனைகளை ‘பாகுபலி-2’ படம் முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது. படம் வெளிவந்த முதல்நாளில் மட்டும் ரூ.41 கோடியை வசூலித்துள்ளது. அடுத்தநாளில் 40.5 கோடியும், நேற்று 46.5 கோடியும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.