35 வயதிற்கு மேற்பட்டோர் பங்கேற்ற தடகள போட்டி

சென்னை மாஸ்டர்ஸ் அத்லெடிக் அசோஷியஷன் நடத்தும் 16வது சென்னை மாவட்ட விளையாட்டு போட்டிகள் சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டிகளை அமைப்பின் தலைவர் செண்பகமூர்த்தி மற்றும் செயலாளர் ருக்மிணிதேவி ஆகியோர் தலைமை தாங்கி நடத்தினர். 35 வயது முதல் 100 வயது வரையிலான பல்வேறு பிரிவுகளில் நடந்த ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல் போட்டிகளில் ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்கள் அடுத்து தஞ்சாவூரில் நடக்கும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அடுத்தடுத்து இந்தியா, ஆசியா மற்றும் உலக அளவில் போட்டிகள் நடக்க இருக்கின்றன.

நடிகர் ஆர்யா, இயக்குனர் கிருத்திகா உதயநிதி, நடிகர் விஜய் ஆண்டனி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ஊக்கப்படுத்தியதோடு, பதக்கம் மற்றும் சான்றிதழ்களையும் வழங்கி சிறப்பித்தனர்.

100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 55+ வயது பிரிவில் முதல் இடத்தை பிடித்திருக்கிறேன். நான் தேசிய அளவில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். அடுத்து வரும் போட்டிகளில் வெற்றி பெற முயற்சிப்பேன் என்றார் அசோஷியேஷன் தலைவரும், ஓட்டப்பந்தய வீரருமான செண்பகமூர்த்தி.

ஒவ்வொரு வருடமும் நான் தவறாமல் இந்த அத்லெடிக் போட்டிகளை காண வருவேன். 35 வயது முதல் 100 வயது வரையில், பல்வேறு பிரிவுகளில் ஓட்டப்பந்தயம், தடை தாண்டுதல் போட்டிகள் நடைபெறுகின்றன. இவர்களுடன் நான் போட்டி போட்டு ஓடினால் கண்டிப்பாக வெற்றி பெற முடியாது. அந்த அளவுக்கு உடல் வலிமையோடும், அர்ப்பணிப்போடும் கலந்து கொண்டு ஒடுகிறார்கள். அவர்கள் ஓடும் வேகத்தை பார்த்தால் நமக்கு நிறைய பயிற்சி தேவை என்பது புரிகிறது. இவர்களை பார்த்தாலே நமக்குள் ஒரு உத்வேகம் பிறக்கிறது. அதனாலேயே தவறாமல் ஒவ்வொரு ஆண்டும் கலந்து கொள்கிறேன். இவர்கள் சர்வதேச அளவிலான போட்டிகளிலும் கூட கலந்து கொள்கிறார்கள். நாம் தான் உடல்நிலையை பேணிக்காப்பதில் அக்கறை செலுத்துவதில்லை. அதற்கு ஏதாவது ஒரு காரணம் தேடுகிறோம். இவர்களை போல நாமும் உடலை பேணிக்காப்பதில் அக்கறை செலுத்த வேண்டும் என்றார் நடிகர் ஆர்யா.

நான் தொடர்ந்து 2வது ஆண்டாக இந்த போட்டிகளை காண வந்திருக்கிறேன். 95 வயது பெரியவர் ஒருவர் ஓடி வெற்றி பெற்றார். அதையெல்லாம் பார்க்கும் உண்மையிலேயே ஆச்சரியமாகவும், நமக்கு ஒரு உந்துதலாகவும் இருக்கிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு மட்டும் மெடல் கொடுக்காமல், கலந்து கொள்ளும் அனைவருக்குமே விருதுகள் வழங்க வேண்டும். ஏனென்றால் இவ்வளவு வெயிலிலும் முழு முயற்சியுடன் வெற்றியை மனதில் வைத்து ஓடுகிறார்கள். அவர்கள் நமக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். குழந்தைகளுக்கு இப்போதிலிருந்தே ஆரோக்கியத்தை பற்றிய விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு உடல் ஆரோக்கியத்தை கட்டாயமாக்க வேண்டும் என்றார் இயக்குனர் கிருத்திகா உதயநிதி.

இங்கு வருவதற்கு முன்பு எந்தவித சிந்தனையும் இல்லாமல் வந்தேன். ஒரு தாத்தா மிக வேகமாக ஓடுவதை பார்த்து அசந்து விட்டேன். எனக்கே வயதாகி விட்டது என நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன், இங்கு வந்த பிறகு தான் வயது ஒரு விஷயமே அல்ல என்பதை உணர்ந்தேன். உடல் ஆரோக்கியம் தான் முக்கியம். எனக்கு செண்பகமூர்த்தி சாரை 6 வருடமாக தெரியும். காலையில் 4 மணிக்கு எழுவார், சரியான நேரத்துக்கு தூங்குவார். எவ்வளவு பிஸியாக இருந்தாலும் நேரம் ஒதுக்கி, உடல்பயிற்சி செய்வார். நாம் அனைவரும் உடல்பயிற்சி செய்வது அவசியம் என்றார் நடிகர் விஜய் ஆண்டனி.