“குத்துச்சண்டை வளையம்” மிகவும் உணர்ச்சிகரமான ஒரு கதையை காண வேண்டிய நேரம் இது. ஆம், “பாக்ஸர்” படக்குழு நீண்டகால முன் தயாரிப்புகளுக்கு பிறகு படப்பிடிப்பை இன்று தொடங்கியிருக்கிறது. இயக்குனர் ஹரி & திருமதி ப்ரீதா ஹரி, நடிகர் விஜயகுமார் மற்றும் அவரது மனைவி, இயக்குனர் சாம் ஆண்டன் மற்றும் இயக்குனர் கார்த்திக் நரேன் போன்ற பிரபல நபர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொள்ள மிக எளிமையாக துவங்கியது. அருண் விஜய் மற்றும் ரித்திகா சிங் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்தை எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் மிகப் பெரிய பொருட்செலவில் தயாரிக்கிறார், அறிமுக இயக்குனர் விவேக் இயக்குகிறார்.
இது குறித்து தயாரிப்பாளர் வி மதியழகன் கூறும்போது, “கடுமையான மற்றும் முழுமையான முன் தயாரிப்புகளுக்கு பிறகு, நாங்கள் இன்று பாக்ஸர் பயணத்தைத் தொடங்குகிறோம். இன்று (ஜூன் 21) தொடங்கப்பட்ட படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு, முழுவீச்சில் நடைபெறும். வழக்கமாக, தயாரிப்பாளர்கள் ஒரு படம், தயாரிப்பின்போது மிகச்சிறப்பாக உருவாவதை கண்டு மகிழ்ச்சி அடைவார்கள். உண்மையில், ஒரு படத்தை பற்றிய அவர்களின் மதிப்பீடு மற்றும் கணிப்புகள் அநேகமாக பாதியில் தான் நடக்கும். ஆனால் “பாக்ஸர்” படத்தை பொருத்தவரை, முன் தயாரிப்பு கட்டத்திலேயே படத்தின் வெற்றி பற்றிய முழுமையான நேர்மறை எண்ணங்கள் உருவாக ஆரம்பித்தன. விவேக் விவரித்த ஸ்கிரிப்ட் அல்லது அருண் விஜய்யின் மனதைக் கவரும் முன் தயாரிப்பு என அனைத்துமே, படப்பிடிப்புக்கு செல்லும் முன்பே படத்தின் மீதான எனது நம்பிக்கையை அதிகரித்தன” என்றார்.
இந்த சீசன் முற்றிலும் விளையாட்டு அடிப்படையிலான திரைப்படங்களால் நிரம்பியுள்ளது. கிட்டத்தட்ட அனைத்து படங்களிலும் எதிரிகளை வென்று சாம்பியனாக மாறுவது தான் கதையாக இருக்கும். தயாரிப்பாளர் மதியழகன் இது குறித்து தெளிவுபடுத்தும்போது, “பாக்ஸர் அத்தகைய விஷயங்களில் இருந்து நிச்சயம் வித்தியாசப்படும். கதை ஏற்கனவே உச்சத்தில் இருக்கும் பாக்ஸர் ஒருவரை பற்றியது. அவரது ஈகோ அவரை எப்படி கீழே கொண்டு செல்கிறது, அவர் எப்படி தனக்கும் இருக்கும் தீய சக்தியுடன் சண்டையிட்டு, தன்னை மீட்டெடுக்கிறார் என்பதை சொல்லும். எல்லாவற்றிற்கும் மேலாக, இயக்குனர் விவேக் ஸ்கிரிப்டில் பொழுதுபோக்கு அம்சங்களை கலந்து, தொகுத்துள்ள விதம் மிகவும் சிறப்பாக இருக்கும்” என்றார்.
தாய்லாந்தில் பீட்டர் ஹெய்ன் மாஸ்டரின் வழிகாட்டுதலின் கீழ் அருண் விஜய்யின் நம்பமுடியாத உயர்மட்ட பயிற்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ரித்திகா சிங் ஒரு விளையாட்டு பத்திரிகையாளராக நடிக்கிறார். மற்ற நடிகர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளிவரும். எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். சி.எஸ்.பாலசந்தர் (கலை), நாடன் (படத்தொகுப்பு), பீட்டர் ஹெய்ன் (சண்டைப்பயிற்சி), ஹினா (ஸ்டைலிஸ்ட்), அருண் (உடைகள்) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணியாற்றுகிறார்கள்.