விடாமுயற்சி, பொறுமை, கடின உழைப்பு ஆகியவை மட்டுமே அருண் விஜயை மிகப்பெரிய இடத்தில் கொண்டு சேர்க்கவில்லை. அத்தோடு மிகவும் பொருத்தமான கதைகளை தேர்ந்தெடுக்கும் அவரது படைப்பாற்றல் மற்றும் கதை திறனும் அனைத்து தரப்பு ரசிகர்களின் கவனத்தை அவர் பால் ஈர்க்க காரணம். அவர் இப்போது தென்னிந்திய சினிமாவில் ‘திரில்லர்’ வகைகளின் பிராண்ட் தூதராகவே மாறி விட்டார் என்று சொல்லும் அளவுக்கு அவரது திரைப்படங்கள் ஒரிஜினல் மற்றும் டப்பிங் பதிப்பு என இரண்டிலுமே மிகப்பெரிய ஆர்வத்தையும், வரவேற்பையும் பெறுகிறது. தமிழில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற அவரது மெடிக்கல் கிரைம் த்ரில்லர் ‘குற்றம் 23’, தெலுங்கு மற்றும் இந்தி பதிப்புகளிலும் (கத்தர்நாக் போலிஸ்வாலா) நல்ல வரபேற்பை பெற்றதன் மூலம் இது தெளிவாகிறது. இயக்குநர்கள் கண்ணன் மற்றும் மிலன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த கோபிநாத் நாராயணமூர்த்தி இயக்கும் புதிய படத்தில் மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
அவரது கட்டுக்கோப்பான உடலமைப்பு மற்றும் இரவிலும் கூட அர்ப்பணிப்புடன் உடற்பயிற்சிகளை மேற்கொள்வது தான் இயக்குனர்கள் அவரை அணுக தூண்டுகிறதா? என்று கேட்டால், புன்னகையுடன் அருண் விஜய் கூறுகிறார், “நான் அப்படி நினைக்கவில்லை. ஏனென்றால், ‘குற்றம் 23’ படத்தில் கூட நான் உடலை காட்டுவதோ, அல்லது அதிரடியான சண்டைக்காட்சிகளிலோ அதிகம் நடிக்கவில்லை. அது முழுக்க முழுக்க புத்திசாலித்தனம் சம்பந்தப்பட்ட ஒரு படம். அந்த படத்தை எனக்கு வழங்கிய இயக்குனர் அறிவழகனுக்கு நன்றி. இந்த கதையை இயக்குனர் கோபிநாத் என்னிடம் சொன்னபோது, அது பல அற்புதமான திருப்பங்களை கொண்டிருந்தது. மேலும் கதையே மிகவும் சிறப்பாக இருந்தது” என்றார்.
குற்றம் 23க்கும் மற்றும் இந்த படத்துக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், குற்றம் 23 மருத்துவத்துறையை மையமாக கொண்ட ஒரு திரில்லர். ஆனால் இந்த படம் நகரத்தில் தொடர்ச்சியாக நடக்கும் மர்மமான கொலைகளை பற்றியும், அவற்றின் பின்னணியில் உள்ள மர்மத்தை போலீஸ் அதிகாரி எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதையும் பற்றியது. நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை இறுதி செய்து வருகிறார் இயக்குனர். எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால், மார்ச் மாத இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கும்” என்றார்.
தற்போது, அருண் விஜய் கொல்கத்தாவில் அக்னி சிறகுகள் படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். விஜய் ஆண்டனி இன்னொரு கதாநாயகனாக நடிக்க, ஷாலினி பாண்டேவும் உடன் நடித்து வருகிறார். மேலும், குத்துச்சண்டை விளையாட்டை அடிப்படையாக கொண்ட ‘பாக்ஸர்’ திரைப்படத்தையும் மிக விரைவில் தொடங்க இருக்கிறார் அருண் விஜய்.