கிராமப்புற திரைப்படங்களுக்கு அதிக வேலை இருக்காது, மிகவும் எளிதாக இருக்கும் என்று பலரும் நினைக்கிறார்கள். பச்சைப்பசேலென வயல் வெளிகள், அமைதியான ஏரிகள், தெளிவான சிற்றோடைகள், வண்ணமயமான திருவிழாக்கள், இனிமையான குயில் சத்தம் ஆகியவை மட்டுமே கிராம்மத்து படங்களின் ஆதாரம் என்ற நினைப்பு இருக்கிறது. ஆனால் உண்மையில், தொழில்நுட்பக் குழுவின் இமாலய உழைப்பு தேவைப்படுகிறது. குறிப்பாக ‘கலை இயக்குனர்’ பங்கு அதிகமாக தேவைப்படுகிறது. ஒரு ‘திருவிழா’ படம் என்று சாதாரணமாக சொல்லி விடலாம். ஆனால் அந்த திருவிழா அனுபவத்தை திரையில் கொண்டு வருவது மலையை இழுப்பதற்கு சமம். சிவகார்த்திகேயன்-சமந்தா நடித்துள்ள சீமராஜாவில் கலை இயக்குனர் முத்துராஜின் உழைப்பு அபரிமிதமானது.
சீமராஜா படத்தின் ட்ரைலர் மற்றும் காட்சிகள் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் கலை இயக்குனர் முத்துராஜ் குழுவில் உள்ள மற்றவர்களுக்கு தன் நன்றியை தெரிவிக்கிறார். அவர் கூறும்போது, “சீமராஜாவில் என் வேலை நன்கு கவனிக்கப்படுகிறது என்றால், அதற்கு காரணம் பாலசுப்ரமணியம் சாரின் ஒளிப்பதிவு தான். அவர் என் கலை வேலையின் ஒவ்வொரு நுணுக்கமான விஷயங்களையும் ரசித்தார். அவர் படப்பிடிப்புக்கு முன்பே வாட்ஸாப்பில் என் பரிந்துரையையும் கேட்பார். இசையமைப்பாளர் டி இமான் திருவிழா சூழலை தன் இசையால் உருவாக்கியிருக்கிறார்” என்றார் முத்துராஜ்.
24AM ஸ்டூடியோஸ் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா பற்றி கூறும்போது, “பொதுவாக, ஒரு கிராமத்து படம் பண்ணும் போது அதன் தயாரிப்பாளருக்கு எங்கள் ஆர்ட் டிபார்ட்மெண்ட் மீது சில கட்டுப்பாடுகள் இருக்கும். பெரும்பாலும் எங்கள் வேலை கோயில் திருவிழா அல்லது மார்க்கெட் உருவாக்குவதோடு நின்று விடும். ஆனால் ஆர்.டி.ராஜா என் கற்பனை திறனை வெளிப்படுத்த எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். சில நேரங்களில், நான் செலவை மனதில் வைத்து சமரசம் செய்து கொண்டாலும், படம் நன்றாக வருவதற்கு என்னை ஊக்குவிப்பார். மேலும், பொன்ராம் சாரின் கிராமப்புற வாழ்க்கையை மிகவும் வண்ணமயமாக வழங்கும் நோக்கம் என்னை இன்னும் பரிசோதனை செய்ய தூண்டியது. இயல்பாகவே ஒரு வெற்றிப் படத்தில் பணிபுரிந்த உணர்வு சீமராஜாவில் எனக்கு கிடைத்தது” என்றார்.
சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், சூரி, நெப்போலியன், லால் மற்றும் பல பிரபல நடிகர்கள் நடித்துள்ள இந்த சீமராஜாவை பொன்ராம் இயக்கியிருக்கிறார். டி.இமான் இசையில், பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவில், 24AM STUDIOS சார்பில் மிகபிரமாண்டமாக தயாரித்திருக்கிறார் ஆர்.டி.ராஜா. விநாயகர் சதூர்த்தி (செப்டம்பர் 13) அன்று பிரமாண்டமாக வெளியாகிறது.