ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் அவர்கள் விரைவில் அரசியலுக்கு வர உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ரஜினி தரப்பில் இருந்து இதற்குப் பெரிய அளவில் எதிர்வினை இல்லை என்றாலும், கமலோ தனது அரசியல் வரவைப் பறைசாற்றும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே தனது பிறந்தநாளன்று கமல் புதிய கட்சி ஆரம்பிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னணி கதாநாயகர்களின் அரசியல் வருகை குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் விவேக், “இந்த விவகாரம் குறித்து நான் ஏற்கனவே பேசி விட்டேன். ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால் அவர்களை முழு மனதோடு வரவேற்பேன். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அரசியலுக்கு வருவது மிக எளிது. ஆனால் நம்பத்தன்மையுடன் யார் நிலைத்து நிற்கிறார்கள் என்பது தான் முக்கியமான விஷயம். அவர்கள் இருவரும் முழு கவனம் மற்றும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்பதே என் விருப்பம். அர்ப்பணிப்பு, கவனம் மற்றும் பொறுப்பு ஆகியவை இருந்தால் மட்டுமே மக்களும் அவர்களை ஆதரிப்பார்கள்” என்றார்.