மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரிப்பில் இயக்குநர் இளமாறன் (புளூ சட்டை மாறன்) இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆன்டி இண்டியன்.. விரைவில் இந்தப்படம் வெளியாக உள்ள நிலையில் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இயக்குநர் புளூ சட்டை மாறன், தயாரிப்பாளர் ஆதம் பாவா, நடிகர்கள் ராதாரவி, பிக்பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி, இயக்குநர் ராமகிருஷ்ணன், விஜய் டிவி பாலா, துரை சுதாகர், வழக்கு எண் முத்துராமன், ஜெயராஜ், சார்லஸ் வினோத், நடன இயக்குனர் ரமேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.,
இந்தப்படத்தில் நடித்துள்ள கானா பாடகர்களை மேடைக்கு வரவழைத்து அற்புதமான கானா பாடல்களை பாடவைத்து கலகலப்பாக இந்த இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியை துவங்கினார்கள்..
நிகழ்ச்சியில் நடிகர் ராதாரவி பேசும்போது, “இந்தக்கதையை என்கிட்டே சொல்றதுக்காக மாறன் வந்தப்ப, கிட்டத்தட்ட மூணுதடவை அவரை திரும்ப திரும்ப வரவச்சு கதை கேட்டேன்.. ஏன்னா இந்தப்படத்துல நடிக்கலாமா, ஏதாவது சிக்கல் வருமா அப்படின்னு யோசிக்கிறதுக்காகத்தான். படத்துல சிஎம்-ஆ நடிச்சிருக்கேன். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே எழுதப்பட்ட கதை இது. அப்ப யாரு சிஎம்ஆ இருந்தாங்கன்னு உங்களுக்கு தெரியும்.. படம் பார்க்கும்போது யாரை பிரதிபலிச்சிருக்கேன்னு தெரியும்.. ஆனா இந்த நேரத்துல இந்தப்படம் வெளியாகும்போது யாரு என்னவிதமா நினைச்சுக்குவாங்கன்னு தெரியல
இந்தப்படம் வெளியாகிறதுக்கே மாறனுக்கு நிறைய எதிர்ப்பு இருக்குன்னு சொல்றாங்க.. நிஜம் தான்.. அத்தனை பேரு படத்த கழுவி ஊத்திருக்கார்.. நிச்சயம் காத்துக்கிட்டுதான் இருப்பாங்க.. திட்டத்தான் செய்வாங்க.. அதேசமயம் படம் வெளியானா மாறனுக்கு வாழ்த்தும் கிடைக்கும்.. அந்த அளவுக்கு திட்டும் கிடைக்கும்.. அதனால யாரும் என்ன வேணா பேசிட்டு போகட்டும்.. நீ எதுக்கும் வாய் திறந்து கருத்து சொல்லாம அப்படியே சைலண்ட்டா இருந்துரு.
ஒரு படத்தை படமா பாருங்க.. படம் முடிஞ்சுதா, அதை தியேட்டர்லயே விட்டுட்டு வந்துருங்க.. விஜய் பைரவான்னு ஒரு படத்துல மெடிக்கல் காலேஜ் மோசடி பத்தி சொல்லிருந்தாரு.. ஆனால் அவ்வளவு பெரிய ஹீரோ சொல்லிட்டாருன்னு உடனே திருந்தவா போறாங்க.. அதுக்கு பின்னாடி இதே மாதிரி ரெண்டு காலேஜ் திறந்துட்டாங்க..
நிச்சயம் இந்தப்படம் வெளியானதும் இதுக்கு விவாத மேடை நடத்துறதுக்கு தயாரா ஒரு கூட்டம் இருக்கும்.. இந்தக்காலத்துல கான்ட்ரவர்ஸியா படம் எடுத்தா நிச்சயமா ஓடும். இப்ப தான் பொய் பெயர்களை சூட்டி உண்மை கதைன்னு படம் எடுக்கிறாங்கள்ல,, அதெல்லாம் நல்லாத்தானே ஓடுது.
படங்களை எல்லாம் ஒடிடி தளத்துலேயே ரிலீஸ் பண்ணிகிட்டே இருந்தா, உன் படத்துக்கு இவ்வளவுதான் வேல்யூ அப்படினு, நாளைக்கு ஹீரோவாட சம்பளத்தையே அவங்க தான் நிர்ணயிப்பாங்க” என்றார்.
இயக்குநர் புளூ சட்டை மாறன் பேசும்போது, “.இந்தப்படத்துல ஜெயராஜ்னு நிஜமான ரவுடி ஒருத்தரை முக்கியமான வேடத்துல நடிக்க வச்சிருக்கேன்.. இந்தப்படத்தோட ட்ரெய்லர் வெளியான பின்னாடி அவருக்கு ஏழு படம் புக் ஆகிருக்கு.
விஜய் டிவி புகழ் பாலா ஒருமுறை ஏதேச்சையா என்ன சந்திச்சப்ப வாய்ப்பு கேட்டிருந்தார். இந்தப்படத்துல அவருக்கு நல்ல கேரக்டர் ஒன்னு இருந்தது. அதனால அவரை கூப்பிட்டு நடிக்க வச்சேன்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு தினம் லேட்டாவே வந்துக்கிட்டு இருந்தாரு.. ஏழு மணிக்கு வரச்சொன்னா எட்டு மணிக்கு வர்றாரேன்னு கடுப்பாகி, தம்பி நீ பின்னால சிம்பு மாதிரி பெரிய ஆளா வருவப்பா அப்படின்னு சொன்னேன்.. ஆனா அவரை ஒன்பது மணிக்குத்தான் வரச்சொல்லி இருக்காங்க.. ஆனா அவரு எட்டு மணிக்கே வந்துருக்கார்னு அப்புறம் தான் தெரிஞ்சது,.
இந்தப்படத்துல ராதாரவி சார் நடிச்சாத்தான் நல்லா இருக்கும்னு அவருகிட்ட மூணு தடவை போய் கதை சொன்னேன். அவரும் ஒத்துக்கிட்டாரு.. படம் பார்க்கிறதுக்கே லைவா இருக்கணும்கிறதால அவரையும் இயல்பா காட்டணும்னு சில விஷயங்களை செய்ய சொல்லி அவர்கிட்ட சொன்னேன்.. அதுக்கு அவரு, அப்படின்னா முதலிரவு காட்சியையும் அப்படித்தான் லைவா பண்ணுவியான்னு சிம்பிளா ஒரு கேள்வி கேட்டார் நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்..
ஆனா நான் சொன்னபடி நடிக்க ஒத்துக்கிட்டாரு. அதேசமயம் ஷூட்டிங் ஸ்பாட்டுல அவரோட வசனத்துல கரெக்சன்லாம் பண்ணினாரு.. ஒரு இயக்குனரா என்னால அதை அப்படியே ஏத்துக்க முடியல.. அதனால நீ சொன்ன மாதிரியும் எடுத்துக்க.. நான் கரெக்சன் சொன்ன மாதிரியும் எடுத்துக்க, உனக்கு எது சரியா படுதோ அதை பயன்படுத்திக்க அப்படின்னு சொன்னாரு.. அவரு சொன்ன மாதிரி ரெண்டு விதமாவும் எடுத்துட்டு, படத்தை எடிட் பண்ணும்போது ரெண்டையுமே மிக்ஸ் பண்ணி பயன்படுத்திட்டேன்.. ரொம்பவே நல்லா வந்திருக்கு
சென்னையில இருக்குற திறமையான கானா பாட்டு இளைஞர்களை இதுல நடிக்க வச்சிருக்கேன்.. சார்பட்டா பரம்பரை படத்துக்கு பின்னாடி, இந்தப்படத்துல சின்னச்சின்ன கேரக்டர்ல நடிச்சிருக்கிற நடிகர்கள் கூட ரசிகர்களால பெரிசா கவனிக்கப்படுவாங்க” என்றார்
பிக்பாஸ் புகழ் நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி பேசும்போது, “இந்தப்படத்துல நடிக்கிறேன்னு தெரிஞ்சதும் பலரும் மாறன் படத்துலயா நடிக்கிற, அவருக்கு டைரக்சன்லாம் தெரியுமான்னு கேட்டாங்க.. ஆனா ஒவ்வொரு விஷயத்தையும் பாத்து பாத்து பண்ணிருக்காரு.. ஆனா இந்தப்படம் வெளியானதும் நானே ஒரு புளூ சட்டையை போட்டுக்கிட்டு வந்து அவரோட சேனல்லேயே இந்தப்படத்துக்கு விமர்சனம் பண்ணுவேன்.. அதுக்கு மாறன் அனுமதி தரனும்’ என பேசினார்.
இயக்குனரும் நடிகருமான ராமகிருஷ்ணன் பேசும்போது, “இந்தப்படத்தோட சேலம் ஏரியா விநியோக உரிமையை நான் தான் வாங்கிருக்கேன்.. சேரன்கிட்ட உதவி இயக்குனரா வேலை பார்த்த சமயத்துல அவரோட ஆட்டோகிராப் படத்தையே சேலத்துல வெளியிட வாய்ப்பு கிடைச்சது.. ஆனா அந்த சமயத்துல அதை பண்ண முடியாம போச்சு. மிகப்பெரிய லாபத்தை மிஸ் பண்ணினேன்.. ஆனா இந்தப்படத்தை பார்த்ததும் இதை சேலத்துல நாம ரிலீஸ் பண்ணனும்னு முடிவு பண்ணி வாங்கினேன்.. இப்ப மிகப்பெரிய தியேட்டர்லாம் போட்டிபோட்டு படத்தை கேட்டுக்கிட்டு இருக்காங்க.” என்றார்.
தயாரிப்பாளர் ஆதம் பாவா பேசும்போது, “மாறன் ஒரு மனோ தத்துவ நிபுணர் மாதிரி. படம் ரிலீசானதுமே பாக்கணும் அப்படிங்கிற ஆர்வத்தால நமக்கு ஏற்படுற மன உளைச்சல் அவரோட விமர்சனங்களை பார்த்ததும் அப்படியே குறைஞ்சிரும்.
இந்தப்படத்துக்கு மாறன் தான் இசையமைச்சிருக்காரு.. அதுபத்தி அவரு தன்னடக்கமா தான் பேசினாரு.. ஆனா படத்துக்கு என்ன தேவையோ அதை சரியா பண்ணிருக்காரு.. இந்தப்படம் வெளியானதும் நிறைய படங்களுக்கு அவரை இசையமைக்க கேட்டு வந்தாலும் அதுல ஆச்சர்யப்பட தேவையில்லை. வடிவேலுக்கு அப்புறமா யதார்த்தமா நடிக்கிற காமெடி நடிகர் இல்லாத சூழல் இருக்கு.. ஆனா இந்த விஜய் டிவி பாலா நிச்சயம் காமெடில ஒரு பெரிய ஆளா வருவாரு.. ஷூட்டிங்ஸ்பாட்டுல இவரோட நடிப்பை பார்த்து அத்தனை பேரும் விழுந்து விழுந்து சிரிச்சாங்க.. ராதாரவி மாதிரி சீனியர் நடிகர்கள் சொல்கிற கரெக்சன்களை ஏத்துக்கிறதுல தப்பே இல்ல. அவரை மாதிரியான அனுபவசாலி நடிகர்களை நாம தொடர்ந்து பயன்படுத்திக்கணும்.
இந்தப்படத்தை வெளியிட விடக்கூடாதுன்னு ஒரு கூட்டமே செயல்பட்டுக்கிட்டு இருக்காங்க.. இந்தப்படத்தால ஏற்கனவே லாபம் கிடைச்சிடுச்சு அப்படின்னு நான் இதுக்கு முன்னாடி நிகழ்ச்சில சொல்லிருந்தேன்.. ஆனா அப்படி ஏதும் நடக்கலை.. ஏன்னா இந்தப்படத்தோட வியாபாரத்துல மிகப்பெரிய சதி நடந்திருச்சு.
இந்தப்படத்தை வெளியிட்டா தங்களுக்கு ஏதாவது பிரச்சனை வந்துருமோன்னு ஒடிடி நிறுவனங்கள் இந்தப்படத்தை வாங்க தயங்குனாங்க.. தமிழர்களுக்கு எதிரான பேமிலிமேன்-2 மாதிரியான படங்களை ரிலீஸ் பண்றாங்க.. ஆனா தமிழர்களுக்கான படத்தை ரிலீஸ் பண்ண மறுக்கிறாங்க.. அதனால ஒரு பக்கம் தியேட்டர்கள்ல நாங்களே சொந்தமா ரிலீஸ் பண்றோம்.. இன்னொரு பக்கம் வெளிநாடுகள்ல காண்ட்ரலி அப்படிங்கிற நிறுவனம் மூலம் தியேட்டர் வசதிகள் இல்லாத ஊர்களுக்கு கேபிள் மூலமா இந்தப்படத்தை வெளியிட ஒப்பந்தம் பண்ணிருக்கோம்.. இதனால வியாபாரத்துல பாதிப்பு ஏற்படாம இருக்க ஒரு புது முயற்சி எடுத்துருக்கோம்னு சொல்லலாம்” என்று பேசினார்..