தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகையாகவும், நடனக்கலைஞராகவும் வலம்வந்த ராஜசுலோச்சனா, குலேபகாவலி, என் தங்கை, பாரதவிலாஸ், இதயக்கனி, சில நேரங்களில் சில மனிதர்கள் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர். 1950 முதல் 1980 வரையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ராஜசுலோச்சனாவின் கலையுலக சேவையைப் பாராட்டி, அவருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது.
கடந்த 2013ஆம் ஆண்டில் இம்மண்ணை விட்டுப் பிரிந்த பழம்பெரும் நடிகை ராஜசுலோச்சனாவின் 87ஆவது பிறந்தநாளான இன்று, அவரது திரைப்பயணத்தின் நினைவுகளைப் போற்றும் வகையில், சென்னை தி.நகரில் ‘அமுதும் தேனும்’ விழா நடைபெற்றது. ஜி.எல். ட்ரஸ்ட் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இந்த விழாவில், 60 மற்றும் 70களின் புகழ்பெற்ற நடிகைகளான சி.ஐ.டி.சகுந்தலா, ஜெயமாலினி, ஜெயமாலா, சுச்சு, சரிதா, ரேவதி, மற்றும் விஜயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.