தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்.
புகழ் பெற்ற கன்னட நடிகரும் முன்னாள் மத்திய -மாநில அமைச்சருமான அம்பரீஷ்(66) நேற்று பெங்களுருவில் காலமானார் .அவரது இழப்பு கன்னட திரை உலகிற்கு மட்டுமல்ல இந்திய திரை உலகிற்கே மாபெரும் இழப்பாகும் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது .
மேலும், “கன்னட நடிகர் சங்கம் தலைவர் திரு அம்பரீஷ் அவர்கள் என்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்துடன் நல்லுறவை பேணி காத்தவர் .அவர் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும்வேதனை அடைகிறோம். இயக்குனர் புட்டண்ணாவின் நகராஜாவு என்ற கன்னட திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்து தன் கலை உலக வாழ்க்கையை துவக்கிய அம்பரீஷ் அவர்கள் அதன் பிறகு வில்லன் வேடங்களில் நடித்து 1980- களில் கன்னட சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிக பெருமக்களின் பேராதரவை பெற்று பிரபலமானார். கன்னட, ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் 230-க்கும் மேலான படங்களில் நடித்து சாதனை புரிந்து மக்கள் மனதில் இடம் பிடித்தார் அதோடு கன்னட நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்து நடிகர் சமூகத்தின் வளர்ச்சிக்காக அரும்பணி ஆற்றி வந்தார். சினிமா மட்டுமல்லாமல் அரசியலில் சட்ட மன்ற – பாராளுமன்ற உறுப்பினராகவும் மத்திய -மாநில அமைச்சராகவும் சேவை ஆற்றினார் . அரசியலிலும் சினிமாவிலும் வரலாறு படைத்த அவரது மறைவு இந்திய நாட்டிற்கும் திரை உலகிற்கும் ஈடு செய்ய இயலாத இழப்பாகும். தென்னிந்திய நடிகர் சங்கம் அவரது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தித்து அஞ்சலி செலுத்துவதோடு அவரது இழப்பால் மீளா துயரத்தில் ஆழ்ந்துள்ள அன்னாரது குடும்பத்தாரின் துக்கத்திலும் பங்கு கொள்கிறோம் .”
#தென்னிந்திய நடிகர் சங்கம்