ஓபிஎஸ் அணியின் பக்கம் ஆதரவு அதிகரித்து வருவது சசிகலா அணியை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. உள்ளத்தில் அச்சம் குடியேறிய நிலையில் பேசிய சசிகலா, எதற்கும் அஞ்சப்போவதில்லை என்று கூறியுள்ளார். ஓரளவிற்கு மேல்தான் நாம் பொறுமையை கையாள வேண்டும் அதற்கு மேல் நாம் ஒன்று சேர்ந்து செய்ய வேண்டியதை செய்வோம் என்று வன்முறை தூண்டும் வகையில் சசிகலா பேசியுள்ளார். கிரீன்வேஸ் சாலையில் ஓபிஎஸ் வீட்டிற்கு சென்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆதரவு தெரிவித்தார். அங்கு செய்தியாளர் சந்திப்பு நடந்தது. அதே நேரத்தில் போயஸ் தோட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் சசிகலா பேசினார். அப்போது அவர், அதிமுக இந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சி என்றும், ஜெயலலிதாவின் முயற்சியால் எஃகு கோட்டை போல் அதிமுக கட்சி உருவாகி இருக்கிறது என்றார். ஜெயலலிதா நம்மிடம் தான் இருக்கிறார். அவர் நம் கழகத்தில் உள்ள புல்லுருவிகளை அடையாளம் காட்டிக் கொண்டிருக்கிறார். அப்படிதான் இன்று நடக்கும் சூழ்நிலைகள் நமக்குத் தெரிவிக்கிறது. எத்தனையோ சோதனைகளை ஜெயலலிதா சந்தித்துள்ளார். அதேபோல ஒரு சோதனையை நான் சந்தித்து வருகிறேன். நான் எதற்கும் அஞ்சப்போவதில்லை. என்றார். ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்டுள்ள அதிமுக கட்சி இதே பலத்துடன் இருக்க வேண்டும் என்பதே என் எண்ணம். இத்தனை தொண்டர்கள் என்னுடன் இருப்பதால் எனக்கு எந்த பயமும் இல்லை என்றார். ஜெயலலிதா சொல்வது போல நம் இயக்கம் ஒரு எஃகு கோட்டை. அந்த கோட்டையை யாராலும் அசைக்க முடியாது. பல சோதனைகளை கடந்து தான் அவர் இந்த இயக்கத்தை நடத்தி வந்தார். அதிமுக கட்சியை பிரித்து ஆள நினைக்கும் யாராக இருந்தாலும் தோற்றுப்போவார்கள் என்று கூறிய சசிகலா, அதிமுக கட்சியை பிரித்தாள நினைப்பவர்கள் செய்துவருவதை ஓரளவுக்கு தான் பொறுத்தக்கொள்ள முடியும் என்றார். ஜனநாயகத்திற்கு மதிப்பு கொடுத்து நம்பிக்கை வைத்து நாம் பொறுமை காத்து வருகிறோம். ஓரளவிற்குத்தான் பொறுத்துக்கொள்ள முடியும். எல்லை மீறும் போது செய்ய வேண்டியதை அனைவரும் இணைந்து செய்வோம் என்று ஆவேசமாக கூறினார். சசிகலாவின் வன்முறையை தூண்டும் வகையிலான பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.