நடிகர் ரஜினி குறித்து தேவையில்லாமல் பேசி, அவருக்கு திடீர் முக்கியத்துவம் கொடூத்து பெரிய ஆளாக்கிவிட வேண்டாம் என அமீத்ஷா, பாஜகவினருக்கு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து பாஜக மூத்த தலைவர்கள் சிலர் கூறியதாவது:-
தமிழகத்தில் பாஜகவை பெரிய அளவில் வளர்க்க வேண்டும். மற்ற மாநிலங்களை போல தமிழகத்திலும், ஆட்சியை பிடிக்க வேண்டும் என பாஜகவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். ரஜினி உடல் நிலை சரியில்லாமல் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, அவரது வீடு தேடி சென்று, பிரதமர் மோடி நலம் விசாரித்தார். இதை தொடர்ந்து மத்திய அமைச்சர்களும், பாஜ மாநில தலைவரும் தொடர்ச்சியாக ரஜினியை சந்தித்து பேசினர்.
ஒவ்வொரு முறையும் ரஜினியை சந்திக்கும் பா.ஜ., தலைவர்கள், அரசியல் தொடர்பாக அவரது எண்ணத்தை அறியும் முயற்சியில் ஈடுபடுவர். ஆனால், அந்த நேரத்தில் ரஜினி, தனக்கு அரசியல் வேண்டாம் எனவும், தனக்கு அரசியலில் முழுமையாக ஆர்வம் இல்லை என்றும் கூறவில்லை. இதனால் பாஜகவினர், ரஜினியை தன் பக்கம் எப்படியாவது இழுத்துவிட வேண்டும் என முடிவு செய்தனர். இதற்காக அவருக்கு ராஜ்யசபா எம்பி பதவி வழங்குவதாகவும் ரகசிய பேச்சு வார்த்தை நடந்தது. ஆனால், அதில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை.
அதன் ஒரு பகுதியாக இலங்கையில், தமிழர்களுக்கு மறுவாழ்வு வீடுகளை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் ரஜினியை கலந்து கொள்ள செய்ய வேண்டும் என மோடியும், அமித் ஷாவும் திட்டமிட்டனர். அதன்படி இலங்கையில் இருந்து ரஜினிக்கு அழைப்பு வந்தது. ரஜினியும், நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஒப்புக் கொண்டார்.
தமிழகத்தில், அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்பினர் ஆகியோரின் கடும் எதிர்ப்பால் ரஜினி, இலங்கை பயணத்தை ரத்து செய்தார். இதனால், பிரமதர் மோடி மற்றும் தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் கடும் அதிருப்தி அடைந்தனர்.
இந்நிலையில், சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி, மீண்டும் ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
இன்று 4வது நாளாக ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்து வரும் ரசிகர்களை சநதித்து, புகைப்படம் எடுத்து கொண்டு வருகிறார். முதல்நாள் விழாவில் பேசிய ரஜினி, தன்னை அரசியல் கட்சிகள், ஆதாயத்துக்காக அரசியலுக்கு இழுப்பதாகவும், அவர்களுடன் சேர விரும்பவில்லை என்று கூறினார். மேலும், நான் அரசியலில் வருவது என் கையில் இல்லை. ஆண்டவன் கையில் இருக்கிறது என வழக்கமான டயலாக்கை பேசினார்.
மேலும், “ நான் அரசியலில் ஈடுபட்டால், என்னோடு ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளானவர்கள் இருக்க முடியாது என்று கூறினார்.
இதனால், ரஜினி மீது அதிருப்தி அடைந்த அமித் ஷா, இனிமேல் ரஜினி குறித்து பாஜகவினர் யாரும் பேச வேண்டாம். அவரை நம்பி கொண்டிருக்காமல், நமது கட்சியை தமிழகத்தில் நிலைநாட்டும் முயற்சியில், ஒவ்வொரு தலைவரும், தொண்டரும் களம் இறங்க வேண்டும் என கூறியுள்ளார் என்றனர்.