இதயங்கள் கொள்ளையடிக்கப்பட்ட “அகம் தானாய் அறிகிறதே, அறிமுகம் இனி எதற்கு” பாடல்

இந்த சமூகத்தில் காதல் குறைந்து கொண்டே போகிறது என்று நீங்கள் நினைத்தால், அந்த நம்பிக்கைகளை புதுப்பிக்கும் நேரம் வந்துவிட்டது.  நிச்சயமாக, ஒவ்வொரு காதலர் தினத்திலும் இசை காதலர்களுக்கு ஆடம்பரமான விருந்து அளித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள், இந்த ‘பிப்ரவரி’யும் அதற்கு விதிவிலக்கு அல்ல. சில்லு கருப்பட்டி படத்தின் “அகம் தானாய் அறிகிறதே, அறிமுகம் இனி எதற்கு” என்ற அழகான பாடல் வரிகள் மற்றும் மூலம் நமது இதயங்களை கொள்ளை கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த சில்லு கருப்பட்டி சிங்கிள் தெய்வீகமான காதலின் ஆழத்தை மிக அழகாக வெளிப்படுத்துகிறது. இந்த அன்பின் மழையில் அனைவரும் நிச்சயம் நனைவார்கள். 
பாடலுக்கு கிடைத்துள்ள அபரிமிதமான வரவேற்பை பற்றி இயக்குனர் ஹலிதா ஷமீம் கூறும்போது, “காதல் என்பது ஒரு வித்தியாசமான உணர்வைக் கொண்டது, நாம் முன்னர் சந்தித்திராத ஒருவரை சந்திப்போம், ஆனால் நாம் அவருடன் நீண்ட காலம் பழகியது போலவும், உரையாடியது போலவும் ஒரு வலுவான உணர்வை கொடுக்கும். அது தான் தெய்வீக காதலின் அழகு அல்லவா?. நாம் சந்திக்கும் முன்னரே ஆன்மாக்கள் ஒன்றாக இணைந்திருக்கின்றன. இது ஒரு தவிர்க்க முடியாத உண்மை, இதை நம்பாதவர்களுக்கு அந்த தருணம் இன்னும் வரவில்லை என்பது தான் உண்மை. பிரதீப்குமார் முதன் முதலில் டியூனை போட்டுக் காட்டியபோது, ஒவ்வொரு இசைக் குறிப்பிலும் காதலின் சாராம்சம் இருந்ததை உணர முடிந்தது. அவரது குரலின் மூலம் மயக்கும் காதல் பாடல்களை நமக்கு வழங்கிய அவர், சில்லுக் கருப்பட்டி மூலம் இசையிலும் காதலை அள்ளி தெளிக்கிறார் என்பதில் மகிழ்ச்சி” என்கிறார். 
கண்ணம்மா, மாயநதி, ஆகாயம் தீப்பிடிச்சா, ஆகாசத்த நான் பாக்குறன், மோகத்திரை மற்றும் பல ஆன்மாவை தொடும் பாடல்களை பாடி புகழ்பெற்ற பிரதீப் குமார், ஹலிதா ஷமீம் எழுதிய இந்த பாடலையும் பாடியிருக்கிறார். 
நகர்ப்புற பின்னணிகளைக் கொண்ட நான்கு அழகான காதல் கதைகளை கொண்ட ஒரு தொகுப்பு தான் சில்லு கருப்பட்டி. வெங்கடேஷ் வெலினேனி தயாரித்திருக்கிறார். சமுத்திரகனி, சுனைனா, லீலா சாம்சன், சாரா அர்ஜுன், மணிகண்டன் கே மற்றும் சில பிரபல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.