ஆப்கானிஸ்தானில் ராணுவ தளம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் வீரர்கள் கொல்லப்பட்டதால், அந்நாட்டு ராணுவ அமைச்சர் அப்துல்லா ஹபிபி ராஜினாமா செய்தார். அமெரிக்காவில் கடந்த 2001இல் ஒசாமா பின்லேடன் தலைமையிலான அல்கொய்தா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.விமானங்களை மோதி நடத்திய தாக்குதலில் முக்கிய வர்த்தக பகுதியான இரட்டை கோபுரம் உள்ளிட்ட கட்டடங்கள் சேதம் அடைந்தன; இதில் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
அப்போது ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் இருந்த தலிபான்கள், பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்தனர். இதனால், ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. இதில், தலிபான் ஆட்சி ஒழிக்கப்பட்டது. கர்சகாய் தலைமையில் மக்களாட்சி அமைந்தது. தற்போது சில பகுதிகளில் தலிபான்கள் ஆதிக்கம் உள்ளது. இவர்கள் மீது அமெரிக்க கூட்டுப்படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சில நாட்களுக்கு முன், மஷார் இ ஷரீப் நகரில் உள்ள ராணுவ தளத்திற்குள் புகுந்து தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இதில் 140 வீரர்கள் கொல்லப்பட்டனர். ‘அரசு மற்றும் அதிகாரிகளின் கவனக்குறைபாடே, மிகப் பெரிய தாக்குதலுக்கு காரணம். தாக்குதலுக்கு பொறுப்பேற்று, முக்கிய பொறுப்பில் உள்ளோர் பதவி விலக வேண்டும்’ என, மக்கள் குற்றஞ்சாட்டினர். 2இதனால் ராணுவ அமைச்சர் அப்துல்லா ஹபிபி, தலைமை தளபதி குவாடம் ஷா ஷஹீம் ஆகியோர் பதவியை நேற்று ராஜினாமா செய்தனர். ராஜினாமாவை அதிபர் அஷ்ரப் கானி ஏற்றுக் கொண்டார்.