நடிகர் விஷால் மத்திய, மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை

நடிகர் விஷால் மத்திய, மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை

சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு நுங்கம்பாக்கம் லீ மேஜிக் லேண்டர்ன் பிரிவியூ திரையரங்கில் 22.05.2018 அன்று மாலை ஆறு மணிக்கு எளிமையாகவும் இனிமையாகவும் நடந்தது. தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்க செயலாளருமான புரட்சி தளபதி, அயன் மேன் விஷால் அவர்கள் அட்டை வழங்கும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் .

சங்கத்தின் செயலாளர் ஆர்.எஸ்.கார்த்திக் தெளிவான நீரோட்டத்தமிழில் வரவேற்புரை வழங்கினார். தலைவர் டி.ஆர். பாலேஷ்வர், துணைத்தலைவர் டி.ஆர்.ராம் பிரசாத் என்கிற பிரபு, பொருளாளர் மதி ஒளி குமார், இணைச் செயலாளர் ம.அண்ணாதுரை, கவுரவ ஆலோசகர்கள் நெல்லை சுந்தர்ராஜன், மேஜர் தாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினருக்கு ஒளிர்வண்ண போர்த்துதல் ஆடை அணிவித்து வரவேற்றனர் .முதல் அடையாள அட்டையை மூத்த பத்திரிகையாளர் நெல்லைபாரதிக்கு வழங்கிய விஷால், உதடுகளில் தேங்கிய புன்னகையும், முகத்தில் தவழ்ந்த பெருமிதமும் மாறாமல், கடைசி உறுப்பினர் வரைக்கும் கனிவோடு வழங்கி, சங்கத்துக்கு பெருமை சேர்த்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய விஷால், பத்திரிகையாளர்கள் மீது கொண்டுள்ள பாசத்தையும், நாட்டு நடப்பின் மேலான கோபத்தையும் அக்கறையோடு பதிவு செய்தார். அவர் ஆற்றிய உரை…

மதிப்புக்குரிய கலையுலகத்தைச் சார்ந்த, நமது குடும்பத்தைச் சார்ந்த அனைத்து நண்பர்களுக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். என்றைக்குமே உங்களை நான் பத்திரிகையாளர்களாகப் பார்த்தது இல்லை. என்னுடைய அப்பா, அம்மாவுக்குப் பிறகு நான் பயந்தது உங்களுக்குதான். ஸ்கூல், காலேஜுக்கு அனுப்பும்போது ஒழுங்காக படி, நல்ல விஷயங்களைக் கற்றுக்கொள் என்று அப்பா, அம்மா ஆலோசனை  சொல்லி வளர்த்ததுபோல, சினிமாத்துறையில் ஒரு நடிகனாக நன்றாக நடி, கிசுகிசு வந்துவிடாமல் நடி, நல்லது செய் என்று வழிகாட்டியாக இருக்கும் உங்களைத்தான் நான் அதிகமாக மதிக்கிறேன். என் சிந்தனையில் உங்களைத்தான் ஏற்றிவைத்துக்கொண்டு செயல்படுகிறேன். அதை என்றைக்குமே மறக்கமாட்டேன்.  

இன்றைக்கு நடந்த சம்பவத்தை நினைக்கும்போது இந்த நிகழ்ச்சியை வேறொரு நாளில் வைத்திருக்கலாம் என்றே தோன்றியது. சொல்லிவிடலாம் என்று நினைத்தேன். கடைசி நேரத்தில் மாற்றுவதற்கு வாய்ப்பு இருக்காது என்பதையும் உணர்ந்தேன். ஒரு தர்ம சங்கடமான சூழ்நிலையில், தூத்துக்குடியில் நின்று பேசவேண்டிய நாம் இந்த நிகழ்ச்சியில் இருக்கிறோம் என்றால், அது தவிர்க்க முடியாதது. நாமெல்லாம் ஒரே குடும்பம். இது பத்திரிகையாளர் சங்கத்துக்கு அறுபதாவது ஆண்டு. பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்கள் தொடங்கிய இந்த சங்கம் நல்ல பாதையில் அறுபதாம் ஆண்டைத் தொடுவது நல்ல விஷயம்.

தூத்துக்குடி சம்பவத்துக்காக இங்கே மவுன அஞ்சலி செலுத்தினோம். அது நல்ல விஷயம். நாடு தவறான பாதையில் போய்க்கொண்டிருக்கிறது. இதற்கும் மேல் நாம் வேடிக்கை பார்க்க முடியாது. இனிமேல் இளைஞர்கள் களத்தில் இறங்கி ஒரு முடிவு கட்டினால்தான் உண்டு என்று நினைக்கிறேன்.

இந்த சங்கத்தின் நலனுக்காக நிர்வாகிகள் செயல்படவேண்டும். அது மிகப்பெரிய பொறுப்பு. ஒரு சங்கத்திலேயே எனக்கு ஒருபக்கம் வெள்ளைத்தாடி  வந்துவிட்டது. இப்போது இரண்டு  சங்கம். இரண்டு பக்கமும் வெள்ளைத்தாடி வந்துவிட்டது. உங்களுக்குத் தெரியக்கூடாது என்பதற்காக ஷேவ் செய்துவிட்டு வந்தேன். இல்லையென்றால் இந்த மூன்று வருடங்களில் எவ்வளவு வெள்ளைத்தாடி வளர்ந்தது என்பதை உங்களுக்கு காட்டியிருப்பேன். ஒரு சங்கத்தை வழிநடத்திச் செல்வதில் உள்ள வலி, வேதனைகளை நான் உணர்ந்திருக்கிறேன். இங்கே உள்ள தலைவர், செயலாளர் மற்றும் நிர்வாகிகள் சங்கத்தின் நலனுக்காக உழைப்பதை பார்த்து நன் பெருமைப் படுகிறேன். ஹேட்ஸ் ஆப் டு திஸ் டீம்.

இங்கே இருக்கக்கூடிய பத்திரிகையாளர்கள்  பாரபட்சம் பார்க்காமல் எல்லா திரைப்படங்களுக்கும் ஆதரவு கொடுப்பதற்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். எங்களுக்கு இருக்கிற பொறுப்பை நிறைவேற்றுவதற்கு நாங்கள் உங்களையே சார்ந்திருக்கிறோம். நமது துறை சார்ந்த விஷயங்களுக்கு மட்டுமில்லாமல், சமூக விஷயங்களுக்கும் குரல் கொடுக்கவேண்டிய  கட்டாயம் இப்போது வந்திருக்கிறது. நாம் ஒற்றுமையாக கைகோர்த்து நிற்கும்போது ஒரு நல்ல சமுதாயம் அமையும் என்று நான் நம்புகிறேன். நாட்டில் நடக்கும் நமக்குத் பிடித்த, பிடிக்காத விஷயங்களை எல்லாம் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் நீங்கள்தான் தேர்ந்தெடுக்கப்படாத எம்.எல்.ஏக்கள்.

ஒரு பிரச்னை அந்த குடும்பத்துக்கு தெரியும், அந்த தெருவுக்கு தெரியும், ஊருக்கு தெரியும். ஆனால்  உங்களிடமிருக்கும் பேனா என்கிற வலிமையான ஆயுதத்தால்தான் ஒட்டுமொத்த தமிழகத்துக்கே தெரியும். மக்கள் சில விஷயங்களை ஞாபகம் வைத்துக்கொண்டு ஓட்டுப்போடும் நிலையைக் கொண்டுவரும் ஆயுதம் நீங்கள்தான். இந்த சமுதாயத்தை திருத்தி, நல்ல பாதையில் கொண்டுபோகக்கூடிய பொறுப்பு உங்கள் கையில்தான் இருக்கிறது. அதை நான் எப்போதும் மனப்பூர்வமாக நம்புகிறேன். 

பிலிம் நியூஸ் ஆனந்தன் இறந்தபோது இரண்டு குழந்தைகளைப் படிக்கவைக்கலாம் என்று தோன்றியது. இன்றைக்கு அந்த குழந்தைகள் நல்லபடியாக படித்துக்கொண்டிருக்கிறார்கள். நான் சொல்லிக்கொள்வது ஒன்றுதான், அயம் ஆல்வேஸ் தேர் பார் யூ அஸ் எ பிரென்ட், ஆஸ் அன் ஆக்டர், ஆஸ் எ  சோசியல் ஆக்டிவிஸ்ட்.  நீங்கள்தான் என்னை ரெஸ்பான்சிபிள் ஆக்குகிறீர்கள். இந்த சங்கத்தின் நலனுக்காக தயாரிப்பாளர்கள் சங்கமும் நடிகர் சங்கமும் எப்போதும் உறுதுணையாக இருப்போம்.

இந்த மேடையில் உங்களை வைத்து ஒன்றே ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். இதுக்கும் மேலேயும்  தமிழக அரசும் மத்திய அரசும் சைலண்டா இருந்தா என்ன நடக்கும் என்பதே தெரியாது.