நடிகர் விஷால் தமிழக அரசுக்கு கோரிக்கை

ஜெயலலிதா, நான்காவது முறையாக முதலமைச்சராக பதவியேற்றதும்  மதுவிலக்கு படிப்படியாக அமல் படுத்தப்படும் என அறிவித்தார். தமிழக அரசு அதை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன்படி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி  24 ஆம் தேதி 500 மதுக்கடைகளை தமிழக அரசு மூடவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், நடிகர் விஷால் இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். 

அந்த அறிக்கையில், “2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று நான்காவது முறையாக முதலமைச்சராக பதவியேற்ற புரட்சித்தலைவி அம்மா, படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று உறுதியளித்து அதனை தொடங்கியும் வைத்தார். அமரர் புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 24 ஆம் தேதி 500 மதுக்கடைகளை தமிழக அரசு மூடவிருப்பதாக தகவல் வெளியாகிறது. இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.  ஆர்கே நகர் தொகுதிக்குட்பட்ட புது வண்ணாரப்பேட்டை – திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் க்ராஸ் ரோட் ஜங்ஷன் பகுதியில்  அமைந்துள்ள இரண்டு மதுக்கடைகள் அங்கிருக்கும் பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக இருக்கின்றன.

இந்த மதுக்கடைகளால் பெண்களும் மாணவர்களும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இந்த மதுக்கடைகளை மூடச்சொல்லி அடிக்கடி போராட்டங்கள் நடைபெற்றாலும் அரசு இன்னும் அவற்றுக்கு செவி சாய்க்கவில்லை. எனவே, மூடவிருக்கும் 500 மதுக்கடைகள் பட்டியலில் இந்த மதுக்கடைகளையும் சேர்க்க ஆவண செய்யுமாறு தமிழக அரசையும், ஆர்கே நகர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் தினகரன் அவர்களையும் கேட்டுக்கொள்கிறேன். இதேபோல், தமிழ்நாடு முழுக்க பிரச்னைக்குரிய, பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் இடையூறாக இருக்கும் மதுக்கடைகளையும் இந்த பட்டியலில் சேர்க்க தமிழக அரசை வேண்டிக்கொள்கிறேன்” என விஷால் கூறியுள்ளார்.